தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர்கள் தேர்வு தீவிரம்
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக, சிறப்பாக பணியாற்றும் 350 ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. விருதுக்குரிய ஆசிரியர்கள் பட்டியல், இம்மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியராக தனது வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதி அளவிற்கு உயர்ந்த சாதனையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். அவரின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கின்றன. அடுத்த மாதம் 5ம் தேதி தமிழக அரசு வழங்கும், ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’க்காக, சிறப்பான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. பள்ளியின் வளர்ச்சிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும், மாணவர்கள் கல்வி கற்பதற்காகவும் சிறப்பான முயற்சிகளை எடுத்த ஆசிரியர்கள், கற்பித்தலில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந் தியன் பள்ளிகள், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் விரிவுரையாளர்கள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற் றும் ஆசிரியர்களில் இருந்து 350 பேர் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்ட அளவிலான குழுவிடம் இருந்து, மாநில அளவிலான தேர்வுக் குழுவிற்கு விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தலைமையிலான தேர்வுக் குழுவினர் இரண்டு முறை கூடி, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்வது குறித்து விவாதித்துள்ளனர். விருது பெறும் ஆசிரியர்களின் பட்டியல் இந்த மாத இறுதிக்குள் தயாராகிவிடும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். கடந்த ஆண்டு 344 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதேபோல் தேசிய அளவிலான விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு, டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்க உள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து சராசரியாக 20 ஆசிரியர்கள் தேசிய விருது பெறுகின்றனர். தமிழகத்தில் இருந்து 21 ஆசிரியர்கள் இந்த விருதைப் பெற உள்ளனர். விருது பெறுகின்ற நாளில் அல்லல்படும் ஆசிரியர்கள்: ஒவ்வொரு ஆசிரியரும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுவதை பெருமையாகவும், தனது பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் கருதுகின்றனர். ஒருவழியாக ஓய்வு பெறுவதற்குள் விருது கிடைத்துவிட்டால், அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. தான் விருது பெறும் நிகழ்ச்சியை குடும்பத்தினர் பார்க்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான ஆசிரியர்கள் மனைவி, பிள்ளைகளுடன் சென்னை வருகின்றனர். கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்காக, அதிகாலையிலேயே அரங்குக்கு வந்துவிடுகின்றனர். காலையிலும், பகலிலும் நல்ல சாப்பாடு கிடைக்காமல், விழா நெருங்கும் நேரத்தில் வாடி வதங்கிவிடுகின்றனர். பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்கும் பள்ளிக் கல்வித் துறை, அன்று ஒரு நாள் ஆசிரியர்களுக்கும், உடன் வருபவர்களுக்கும் வயிறார அறுசுவை விருந்து அளிக்கக் கூடாதா? என்று பலரும் ஆதங்கப்படுகின்றனர். விழா அரங்குக்குள் ஆசிரியர்களின் குடும்பத்தினரை அனுமதிக்காத கொடுமையும் நடக்கிறது. இதுபோன்ற எந்தவித குளறுபடிகளும் நடக்காமல், ஆசிரியர்களை உரிய முறையில் கவுரவப்படுத்த துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.