ராமாயணத்தை கேலி செய்த ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்
மும்பை: ராமாயணத்தை கேலி செய்து நாடகம் நடத்திய மும்பை ஐ.ஐ.டி., மாணவர்கள் நான்கு பேருக்கு, தலா 1.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையில் மத்திய அரசின் ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் அமைந்துள்ளது. நாடு முழுதும் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு உயர்கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, கடந்த 31ம் தேதி நடந்த கலை விழாவின் போது, ஹிந்துக்களின் இதிகாசமான ராமாயணத்தை தழுவி, ராஹோவன் என்ற பெயரில் நாடகம் நடத்தப்பட்டது. பெண்ணியத்தை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த நாடகத்தின் வாயிலாக ராமாயணத்தை அவர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது.சர்ச்சைக்குரிய நாடகக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, ஐ.ஐ.டி.,யில் பயிலும் ஒரு பிரிவு மாணவர்கள், நாடகத்தை நடத்திய மாணவர்கள் மீது நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இது தொடர்பான தீவிர விசாரணைக்குப் பின், நாடகத்தை ஏற்பாடு செய்த மாணவர்கள் நான்கு பேருக்கு தலா, 1.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இது, ஒரு செமஸ்டருக்கு மாணவர்கள் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்துக்கு சமமாகும். மேலும் நான்கு மாணவர்களுக்கு தலா 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜூனியர் மாணவர்களுக்கான விடுதி வசதியும் ரத்து செய்யப்பட்டது. அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் அபராதம் கட்ட வேண்டும்; இல்லையென்றால் கூடுதல் தண்டனைகள் வழங்கப்படும் என, ஐ.ஐ.டி., நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.