சிறந்த பொறியியல் மாணவர்களுக்கு ஐஐடியில் படிக்கும் வாய்ப்பு
பொறியியல் கல்லூரி மாணவர்களில் சிறப்பாக படித்து தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஐ.ஐ.டி.யில் பயிலும் வாய்ப்பையும், அதனுடன் பி.எச்.டி. மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கப் பெறலாம். ஐ.ஐ.டி.க்களை ஆய்வு செய்து, வருங்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க அனில் ககோட்கர் தலைமையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையில் இது இடம்பெற்றுள்ளது. அதில், பொறியியல் கல்லூரிகளில் மூன்றாமாண்டு பயிலும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து ஐ.ஐ.டியில் படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், அவர்கள் பி.எச்.டி. படிக்க ஆலோசனை அளித்து, ஐ.ஐ.டி.யில் பிஎச்.டி. பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது குறித்து, ஐ.ஐ.டி. ஊழியர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இதனால் ஐ.ஐ.டி. ஊழியர்களின் சுமைதான் அதிகரிக்கும். ஏற்கனவே, ஐ.ஐ.டி. மாணவர்களின் கல்விக் தரத்தை மேம்படுத்த பேராசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர். இன்னும் கூடுதல் மாணவர்களை சேர்த்துக் கொள்வது என்பது சற்று கடினமான பணியாகும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அனில் ககோட்கரின் அறிக்கையில், ஐ.ஐ.டி.க்கள் கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்ற ஆலோசனையும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.