நுழைவுத் தேர்வு முடிவை வெளியிட தடை இல்லை
மே மாதம் 1ம் தேதியும், 11ம் தேதியும் நடைபெற்ற ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவினை வெளியிடத் தடைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர், இந்த சூழ்நிலையில் நுழைவுத் தேர்வு முடிவினை நிறுத்தி வைக்க விரும்பவில்லை என்று தெரிவித்தனர். இந்த மனு மீதான விசாரணை மே 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதே நீதிபதிகள் பெஞ்ச், மே 11ஆம் தேதி நடந்த மறு நுழைவுத் தேர்வுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நிராகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு குறித்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மனித வள மேம்பாட்டு அமைச்சகமும், சி.பி.எஸ்.இ.யும் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் 20ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 1ம் தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வின் வினாத்தாள்கள் வெளியானதைத் தொடர்ந்து நுழைவுத் தேர்வு காலதாமதமாகத் துவங்கியது. இதனால் பல மாணவர்கள் நுழைவுத் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. நுழைவுத் தேர்வினை எழுதாத மாணவர்களுக்கு மே 11ஆம் தேதி மறு தேர்வு நடைபெற்றது. மே 1ஆம் தேதி நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில், எல்லோருக்குமே மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.