தமிழகத்தில் மேலும் ஒரு பல் மருத்துவ கல்லூரி
தமிழகத்தில், அரசு சார்பாக மேலும் ஒரு பல் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் கூறினார். தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், 3 நாட்கள் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா மற்றும் விழா மலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியாவில் முதல் முறையாக, பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவரான என்னை முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சராக்கி இருக்கிறார். அவரை வணங்குகிறேன். சென்னை மருத்துவ கல்லூரியில்தான் நான் எம்.பி.பி.எஸ். படித்தேன். அப்போதெல்லாம், சென்னை மருத்துவ கல்லூரியும், பல் மருத்துவ கல்லூரியும் ஒன்றாகத்தான் இருந்தது. இன்று கல்லூரி விழாவுக்கு நான் வந்தபோது, பழைய நினைவுகள் என்னுள் வந்தது. மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் தேவை. எப்போதும் நோயாளிகளையே பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு இதுபோன்ற புத்துணர்வு அவசியம். இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளை ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, அடிக்கடி நடத்துங்கள். நான் இங்கு வந்த உடனேயே கல்லூரி முதல்வர் சில கோரிக்கைகளை என்னிடம் வைத்தார். பல் மருத்துவ கல்லூரி புதிய கட்டிடத்திற்கு சென்றபிறகு, இந்த இடத்தை மாணவர்கள் தங்கும் விடுதியாக மாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும், அரசு சார்பாக புதிய பல் மருத்துவ கல்லூரி ஒன்றும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கல்லூரி முதல்வர் கூறிய கருத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டுசென்று, 2 கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்.