நேரடி பணி நியமனம் செய்ய பல்கலைக்கு தடை
பல்கலைகளில், நேரடி பணி நியமனம் செய்ய தடை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, உயர் கல்வித் துறை செயலர் கண்ணன் வெளியிட்ட அரசாணை: பல்கலைகளில், நேர்முகத்தேர்வு மூலம், நேரடியாக பணி நியமனம் நடைபெறுவதாக, தமிழக அரசின் கவனத்திற்கு தெரிய வந்துள்ளது. இந்த நடைமுறையிலான பணி நியமனம், தேவையில்லாமல் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. எனவே, பல்கலைகளில் நடைபெறும் பணி நியமனம், வெளிப்படையாக அமைய வேண்டும். தேவைப்படும் பணி நாடுநர்கள் குறித்து, நாளிதழ்களில் விளம்பரம் செய்து, சம்பந்தப்பட்ட பணிக்கு தேர்வு நடத்தி, அதன்பின் நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும். இதன்பிறகே, பணி நியமனம் செய்ய வேண்டும். இதுகுறித்த, முழு விவரங்களையும், பல்கலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். நாளிதழ்களில் விளம்பரம் செய்யும் தேதிக்கும், நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதிக்கும், குறைந்தபட்சம் 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இந்த புதிய உத்தரவுகளை, அனைத்து பல்கலைக்கழகங்களும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கண்ணன் கூறியுள்ளார். உயர் அதிகாரிகளின், ஆசீர்வாதம் இருந்தால், மாதம் 20 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகளவில் இருக்கின்றன. நேரடி பணி நியமனத்தை முறைப்படுத்த, உயர்கல்வித்துறையில் நடவடிக்கை எடுத்திருப்பது போல், பள்ளிக் கல்வித் துறையிலும், இதன் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளிலும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.