கேம்பஸ் இன்டர்வியூ: மாணவர்களை ஏமாற்றும் புதிய வித்தை!
தமிழகத்திலுள்ள சுயநிதி இன்ஜி., கல்லூரிகள், ஒவ்வோர் ஆண்டும் புதிது புதிதாக படிப்புகளை அறிமுகப்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடுகின்றன. இது தொடர்பான விளம்பரங்களை வெளியிடும்போதே, தங்களது கல்லூரியில் நடத்தப்பட்ட வளாக நேர்காணலில் எத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது என்பதையும் பெரிதாகக் குறிப்பிடுகின்றன. கல்வியின் தரத்தை விட, வேலை வாய்ப்பு சதவீதம் எவ்வளவு என்பதைப் பார்த்தே கல்லூரிகளைத் தேர்வு செய்யும் வழக்கத்துக்கு மாணவ, மாணவியரும், பெற்றோர்களும் மாறி விட்டனர். இதைப்பயன்படுத்தி சுயநிதி இன்ஜி., கல்லூரிகள், நூதனமான ஏமாற்று வேலையைத் துவக்கியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வளாக நேர்காணல் முறை தமிழகத்தில் அறிமுகமான போது, உண்மையிலேயே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நேரடியாக தேர்வு நடத்தி, திறமையான மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கற்பனைக்கு எட்டாத சம்பளத்தைக் கொடுத்தன. இறுதி ஆண்டு மாணவ, மாணவியரை மட்டுமின்றி, அதற்கு முந்தைய ஆண்டுகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்குக்கூட, ஓராண்டு அல்லது இரு ஆண்டுகளுக்கு முன்பே ‘நியமன உத்தரவு’ கொடுக்கும் அதிசயம் எல்லாம் பல கல்லூரிகளில் நடந்தது. அதாவது, இந்த மாணவ, மாணவியர் அனைவரும் படித்த முடித்தவுடன், அந்த நிறுவனத்துக்கு நேரடியாக வேலைக்குச் சேர்ந்து விடலாம். அவர்கள் பெறும் மாதச் சம்பளமும், பல மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருவாயை விட மிக அதிகமாக இருந்தது. இதனால், இன்ஜி., கல்லூரிகளை நாடும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனால், காளான் போல பொறியியல் கல்லூரிகளும் முளைத்தன. இந்த கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், கல்வித்தரமும், அதற்குத் தேவையான திறனுள்ள ஆசிரியர்களும் இல்லை என்பதே நிஜம். இதன் காரணமாக, இத்தகைய கல்லூரிகளில் வளாக நேர்காணல் நடத்த எந்த பெரிய நிறுவனமும் முன் வருவதில்லை. இதனால், வித விதமான பெயர்களில் பன்னாட்டு நிறுவனங்கள் என்று கூறி, சின்னச் சின்ன நிறுவனங்கள் கல்லூரிகளில் வளாக நேர்காணல் நடத்த வருகின்றன. இதுபோன்ற நிறுவனங்கள் வளாக நேர்காணல் நடத்தி தேர்வான மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகியும் பணி நியமன ஆணை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த நிறுவனங்களில் பணி செய்ய குறைவான நபர்களே தேவைப்படுவர். ஆனால், வளாக நேர்காணலில் கூடுதலான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் தேவையில்லை என்றால், ஒரு தேர்வு நடத்தி துரத்திவிடும் வேலையையும் நிறுவனங்கள் செய்து வருகின்றன. சில நிறுவனங்கள், மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிக்கின்றன. இதனால், மாணவர்கள் வேறு வேலை தேடிக்கொள்வர் என்பது அந்த நிறுவனத்தின் எண்ணம். இன்றைய சூழலில் வளாக நேர்காணல் என்பது கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களின் புகழை நிலைப்படுத்தவே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் பணி நியமன ஆணை வழங்குவது அவசியம். இன்ஜி., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வளாகத்தேர்வு நடத்தினால், பணி நியமன ஆணைக்காக, அவர்கள் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்காது. இன்றைய சூழலில் உலக பொருளதாரத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பல நிறுவனங்களின் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளன. இதனால் வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நியமன ஆணையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன. வளாக நேர்காணலில் வழங்கப்பட்ட வாய்ப்பு கடிதத்தை வைத்தே, கல்லூரிகள் ‘நுõறு சதவீத பிளேஸ்மென்ட்’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. ஆனால் பணி நியமன ஆணை பெறும் மாணவர்கள் மிகவும் குறைவு என்பதே உண்மை. இந்த பிரச்னைகளை வளாக நேர்காணலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் தெரிந்து கொள்வது அவசியம். இந்த பிரச்னைகளை விரிவாக விளக்கி தமிழக முதல்வர் கருணாநிதி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு ‘கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்’ அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் முக்கியமாக, ‘வளாக நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எழுந்துள்ள பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு, வளாக நேர்காணல் தேர்வை ஒழுங்கு படுத்த வேண்டும். அனைத்து தேர்வு, நேர்முகத்தேர்வுகளை முடித்தபின், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும். இதை வேலை வழங்கும் நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.