உள்ளூர் செய்திகள்

வடதுருவத்தில் கப்பல் பயணம்: சென்னை மாணவி தேர்வு

பூமி வெப்பமடைதல் குறித்து பிரிட்டிஷ் கவுன்சில் தேசிய அளவில் நடத்திய போட்டியில் இந்தியாவிலிருந்து சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி, லக்னோவைச் சேர்ந்த எஸ். துருவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த இருவரும் 28 பேர் கொண்ட ஆர்ட்டிக் பயணக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். சென்னை அடையாறு ஸ்ரீசங்கரா சீனியர் செகண்டரி பள்ளியில் 12ம் வகுப்பில் படித்து வருகிறார் ஸ்ருதி. அவரது தந்தை கே.வி. நீலகண்டன் சன்மார் குரூப் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக இருக்கிறார். தாய் ஜெயா, ஹரிஸ்ரீ வித்யாலயா பள்ளியில் ஆசிரியை. வணிகவியல் பாடப்பிரிவை எடுத்துப் படித்தாலும்கூட, புவியியலில் அதிக ஆர்வம். கொண்டவர் ஸ்ருதி. செப்டம்பர் 7ம் தேதி ஆர்ட்டிக் பகுதியிலிருந்து தொடங்கும் கப்பல் பயணம் கிரீன்லாந்து வழியாக பபின் தீவில் உள்ள இகாலியுட் என்ற இடத்தில் செப்டம்பர் 20ம் தேதி முடிவடைகிறது. பயணத்தின் போது அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் ஸ்ருதி. பயணத்தின் போது கடலில் பனிக்கட்டி உருகுவதையும் பனிப் பிரதேசத்தில் உள்ள விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றையும் பார்க்க முடியும் என்கிறார். இந்த பயணத்தில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் டொரண்டோவில் முதலில் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். பனிப்பிரதேசத்திர்கு ஏற்ற  ஆடைகளும் காலணிகளும் வழங்கப்படும். கப்பலில் செல்லும்போது, அவர்களைக் கவனித்துக் கொள்ள மருத்துவர் இருப்பார். பூமி வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுகளை இந்த மாணவர்கள் நேரடியாகக் கண்டறியவும் அதுகுறித்து விஞ்ஞானிகளுடன் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் இந்தப் பயணம் உதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்