அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வினியோகம்
சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, சமச்சீர் கல்வி திட்டம் தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வினியோகம், நேற்று முன்தினம் மாலை துவங்கியது. சென்னை நகரில், ராயபுரம் கே.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி (சென்னை கிழக்கு), அயனாவரம் சவுந்திரபாண்டியன் மேல்நிலைப் பள்ளி (சென்னை வடக்கு), சேத்துப்பட்டு எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளி (சென்னை தெற்கு), சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி (சென்னை சென்ட்ரல்) ஆகிய, 4 பள்ளிகளில் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், புத்தகங்கள் வாங்க, மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். இதே போல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பிரதிநிதிகள் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களின் எண்ணிக்கையுடன் வந்திருந்தனர். வந்திருந்த அனைவரிடமும், இன்டென்ட் பெற்று, டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர், ஆங்கிலம், தமிழ் மீடியம் புத்தகங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டன. வாங்கிய புத்தகங்களை, தாங்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றனர். பெரும்பாலான பள்ளிகளுக்கு புத்தகங்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டன. கூட்டம் அதிகம் இருந்ததால், ஒரு சிலர் டோக்கனுடன், மறுநாள் (இன்று) வந்து வாங்கிக் கொள்வதாக சென்றனர். புத்தகங்கள் உடனே வினியோகம் செய்யப்படுமா என ஆசிரியர்களிடம் கேட்டபோது, "புத்தகங்களை வாங்கி வரும்படி தான் எங்களுக்கு உத்தரவு. புத்தகங்கள் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித உத்தரவும் இல்லை. அதிகாரிகள் உத்தரவு கிடைத்ததும், புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவோம்" என்று கூறினர். கிழக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளியில், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து, மாவட்ட கல்வி அலுவலர் (சென்னை-கிழக்கு) சூசன் எட்வர்டு கூறியதாவது: பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளியில் இருந்து சென்னை-கிழக்கு மாவட்டத்தில் உள்ள, 68 பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் செல்கின்றன. ஒவ்வொரு பள்ளி பிரதிநிதிகளுக்கு அவர்கள் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை இங்கு வந்து பெற்று செல்கின்றனர். நாளைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். அனைத்து பாடப்பிரிவு புத்தகங்களும் வந்து விட்டன. எல்லா பள்ளிகளுக்கும் தேவையான புத்தகங்களும் இங்குள்ளன. புத்தக பற்றாக்குறை ஏதும் இல்லை. இவ்வாறு சூசன் எட்வர்டு கூறினார்.பல்வேறு பிரச்னைகளைக் கடந்து, ஒருவழியாக சமச்சீர் கல்வி தான் என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளது. இதற்காக, சமச்சீர் பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்குச் சென்றாலும், நேற்று மாலை வரை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்ட பிறகே, பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கருதப்படுகிறது. சமச்சீர் கல்வி திட்ட பாடப்புத்தகங்கள், அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்பட்டாலும், 16ம் தேதிக்குப் பின்னரே மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. சென்னை உட்பட, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. பள்ளி சார்பாக ஆசிரியர்கள், பிரதிநிதிகள் தங்களது பள்ளிகளுக்குத் தேவையான புத்தகங்களை, வாங்கிச் சென்றனர். பள்ளிகளுக்கு புத்தகம் சென்றடைந்தாலும், மாணவர்களுக்கு 16ம் தேதிக்கு பின்னரே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு காரணம், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில், முன்னாள் முதல்வர் குறித்த தகவல்கள் உட்பட, பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே, ஒன்று முதல் 6ம் வகுப்பு பாடப் புத்தகங்களில், முன்னாள் முதல்வர் குறித்த தகவல்கள், ஸ்டிக்கர் மூலம் ஒட்டப்பட்ட பின்னரே வழங்கப்பட்டது. இதற்கு பல லட்சம் ரூபாய் செலவானது. இந்நிலையில், 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 9 கோடி புத்தகங்கள் உள்ளன. இவற்றில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்வர் குறித்த தகவல்களை லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து மறைப்பதா அல்லது அந்த பக்கங்களை அகற்றி வழங்குவதா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஆலோசனைக்குப் பின், 16ம் தேதிக்குப் பின்னர் தான் மாணவர்கள் கைகளில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் சேரும். அதுவரை, அவர்கள் காத்திருக்க வேண்டியது தான்.