உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரி ‘பர்சர்’கள் நியமன விதியில் திருத்தம்

சென்னை: அரசுக் கல்லூரிகளில் ‘பர்சர்’கள் நியமனத்துக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுக் கல்லூரிகளில் நிதி விவகாரங்களைக் கவனிக்கும் ‘பர்சர்’ (நிதி காப்பாளர்) பதவிக்கு, இதற்கு முன்னதாக, கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றியவர்களை இடமாற்றம் மூலம் நியமித்து வந்தனர். இவர்கள் சார்நிலை அலுவலர்களுக்கான அக்கவுன்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் இருந்து வந்தது. இந்த விதிமுறையில் தற்போது திருத்தம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி, கண்காணிப்பாளர்களை இடமாற்றம் மூலம் ‘பர்சர்’ஆக நியமிப்பது மட்டுமன்றி, நேரடி நியமனம் மூலமும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி கல்வித்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் நேரடி நியமனம் ஆகியவை 3:1 என்ற சதவீதத்தில் நியமிக்கப்பட வேண்டுமென உயர்க் கல்வித்துறைச் செயலர் கணேசன் உத்தரவிட்டுள்ளார். நேரடி நியமனம் பெறுவோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 என்றும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு அதிகபட்சம் 35 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பொது நிர்வாகம் அல்லது எம்.பி.ஏ., முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களில் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நேரடி நியமனத்துக்கு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்