சிறப்பு வழிகாட்டி புத்தகம்: விடுதி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை
பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், விடுதி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் ஆதிதிராவிடர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விடுதிகளில், சுமார் 2 லட்சம் மாணவர்கள் தங்கி, படித்து வருகின்றனர். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டும் கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் 50க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும், தமிழக அரசு அனைத்துப் பாடங்களுக்கும், சிறப்பு வழிகாட்டி புத்தகங்களை ஆண்டு தோறும் இலவசமாக வழங்கி வருகிறது. இதில், முக்கிய வினா-விடைகள், முந்தைய பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள வினா-விடைகள் இடம்பெற்றிருக்கும். இந்த வழிகாட்டிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டு, விடுதிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபருக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆனால், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்., 2 முதல் செய்முறைத் தேர்வும், மார்ச் 3 முதல் பொதுத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பிறகும், இந்தாண்டு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. சமச்சீர்க் கல்விப் பிரச்னையால் பத்தாம் வகுப்பு வழிகாட்டி மட்டும் அச்சடிக்க காலதாமதமானதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிளஸ் 2 புத்தகங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணம் தெரியவில்லை என, ஆசிரியர்கள் கூறுகின்றனர். விடுதி மாணவர்கள் நலன் கருதி, சிறப்பு வழிகாட்டி புத்தகங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.