உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு: உலகிலேயே அகமதாபாத் ஐ.ஐ.எம்.,க்கு இரண்டாவது இடம்!

பிரிட்டனில் உள்ள தி எகனாமிஸ்ட் என்ற பிரபல இதழ் நடத்திய சர்வேயில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தக் கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த மற்றொரு மணி மகுடம் என்பதில் ஐயமில்லை. முதலிடத்தை சிகாகோ பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களை எந்த அளவுக்கு மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தயார் செய்துள்ளன என்பதைக் கருத்தில் கொண்ட இந்த பட்டியலை எகனாமிஸ்ட் தயாரித்துள்ளது. பட்டம் பெற்ற மூன்று மாதங்களுக்கு வேலையில் இருக்கும் மாணவர்கள் சதவீதம், கல்வி நிலையத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்ற மாணவர்கள் சதவீதம் போன்ற பிற அம்சங்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. ஹாங்காங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் மூன்றாவது இடத்தையும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹாஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ் நான்காவது இடத்தையும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லியோநார்ட் என் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது. தி எகனாமிஸ்ட் வெளியிட்டுள்ள உலகிலேயே சிறந்த நூறு பி-ஸ்கூல் பட்டியலில் அகமதாபாத் ஐ.ஐ.எம்., 91-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் 92வது இடத்தில் இருந்த இக்கல்வி நிறுவனம் தற்போது மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது. உலகிலேயே சிறந்த முதல் நூறு பி-ஸ்கூல் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியக் கல்வி நிறுவனம் இது ஒன்றுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் பார் மேனேஜ்மெண்ட் டெவலப்மெண்ட் (ஐ.எம்.டி.,) முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. ஸ்பெயினைச் சேர்ந்த நவரா பல்கலைக்கழகத்தின் ஐ.இ.எஸ்.இ., பிசினஸ் ஸ்கூல் கல்வி நிலையத்திற்கு இரண்டாவது இடமும் சிகாகோ பல்கலைக்கழக கிராஜுவேட் ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்வி நிலையத்திற்கு மூன்றாவது இடமும் ஸ்டான்போர்டு கிராஜுவேட் ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்வி நிலையத்திற்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளன. ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது. பல்வேறு அமைப்புகளில் சர்வேக்கள் பல்வேறு ரேங்க் பட்டியலை அளிக்கின்றன. எகனாமிஸ்ட் சர்வே, கல்வி வட்டாரங்களில் மதிப்புமிக்கது. ஆனால் இந்தப் பட்டியலில் அகமதாபாத் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தை விட முன்னணியில் உள்ள பல மேலாண்மைக் கல்வி நிறுவனங்களை விட பல்வேறு அம்சங்களில் ஐ.ஐ.எம்., முன்னணியில் இருக்கிறது. பாடத்திட்டங்களை வடிவமைக்கும் முறைகளும் கற்றுத்தரும் முறைகளும் மற்ற கல்வி நிறுவனங்களைவிட சிறப்பாகவே உள்ளது என்கிறார் அகமதாபாத் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சமீர் பரூவா. அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்., வேறு ஏதாவது நாட்டில் இதே வசதிகளுடன் இருந்திருந்தால், இப்போது இருப்பதைவிட ரேங்க் பட்டியலில் முன்னிலையில் இருந்திருக்கும். வளரும் நாடுகளை எதிர்மறையான பார்வையுடன் பார்க்கும் நிலையையே மேற்கத்திய நாடுகளில் நடத்தும் ரேங்க் பட்டியல்கள் காட்டுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். அகமதாபாத் ஐ.ஐ.எம்., எகனாமிஸ்ட் பட்டியலில் முன்னணியில் இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. எனினும் எகனாமிஸ்ட் சர்வே உலகளாவிய நிலையில் மாணவர்களைச் சேர்க்கும் கல்வி நிறுவனங்களை கருத்தில் கொண்டே செய்யப்பட்டுள்ளது. ஆனால், அகமதாபாத் ஐ.ஐ.எம்., உள்நாட்டு மாணவர்களுக்காகச் செயல்படும் கல்வி நிறுவனம். இந்த ரேங்கிங் மாணவர்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையை வளர்க்க உதவும். வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு தடைகள் உள்ளன. உள்நாட்டு மாணவர்களுக்கே போதிய இடம் அளிக்க முடியாத நிலை உள்ளது என்று அகமதாபாத் ஐ.ஐ.எம்., தலைவர் பேராசிரியர் அஜய் பாண்டே தெரிவித்தார். உலக அளவில் டாப் 25 மேலாண்மை கல்வி நிலையங்களுக்குள் இருக்க நிச்சயம் தகுதியுடையது அகமதாபாத் ஐ.ஐ.எம்., என்கிறார் அந்தக் கல்வி நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் ஒருவர். இந்திய அளவில் பல்வேறு இதழ்கள் நடத்திய மேலாண்மை கல்வி நிலையங்கள் நடத்திய சர்வேக்களில் முதலிடம் பெற்றுள்ளது அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்., என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டில் பைனான்சியல் டைம்ஸ் இதழ் நடத்திய சர்வேயில் முதல் 20 இடங்களில் ஐதராபாத்தைச் சேந்த இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் இடம் பெற்றது. அதேசமயம், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்., அந்த இருபது இடங்களில் இடம் பெறவில்லை என்பது சர்ச்சையைக் கிளப்பியதும் நினைவிருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்