உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையில் டெக்னோ பார்க் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் மின் பற்றாக்குறை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு தீர்வுகாணும் வகையில், சோலார் மின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. தேசிய ஜவஹர்லால் நேரு சோலார் அமைப்பின் சார்பில், வரும் 2022 ஆம் ஆண்டுக்குள், சோலார் மூலம் நாடு முழுவதும் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்குள் 3,000 மெகாவாட் மின்சாரம் சோலார் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதன்படி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஒரு ஆண்டில், தனது மின்பயன்பாட்டு கட்டணத்தில், ஆறு சதவீதம் சோலார் உற்பத்தி மூலம் குறைத்துக் கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் இதற்கான செயல்பாட்டில் இறங்கியுள்ளன. கோவை பாரதியார் பல்கலையில், மூன்று கோடி ரூபாய் செலவில், டெக்னோ பார்க் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான செயல்பாட்டு திட்டங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பல்கலைக்கழக இயற்பியல்துறை பேராசிரியர் ராஜேந்திரன் கூறுகையில், "எதிர்கால மின் உற்பத்தியில் சோலார் முக்கிய பங்கு வகிக்கும். இதற்கான பணிகளுக்கு மனித வளம் அவசியம். சோலார் மின் உற்பத்தியில் உள்ள சில தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதும் கட்டாயம். பல்கலையில், டெக்னோ பார்க் அமைக்க உள்ளோம். முதல் கட்டமாக சோலார் மின் உற்பத்தி சார்ந்த சான்றிதழ் படிப்பை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தி பணிகளை தொடர உள்ளோம். 4 அல்லது 5 வார கால சான்றிதழ் படிப்பு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும்" என்றார். பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை கூறுகையில், "டெக்னோ பார்க் மூலம் பல திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படும். அதற்கான முதல்கட்ட பணிகள் தயார் நிலையில் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் சோலார் மின் உற்பத்தி சார்ந்த சான்றிதழ் படிப்பை முதல்கட்டமாக அமல்படுத்த உள்ளோம். இதில், பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், நடமாடும் பஸ் வடிவமைக்கப்பட உள்ளது" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்