மீனாட்சி அம்மாள் கல்வி நிறுவனத்தில் வருமானவரி சோதனை
சென்னை: சென்னையில் உள்ள, மீனாட்சி அம்மாள் கல்வி நிறுவனங்களில், வருமான வரித்துறையினர், நேற்று சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறையினர், தமிழக கல்வி நிறுவனங்களில் நடத்தும், மூன்றாவது சோதனை இது. கல்வியாண்டு துவக்கத்தில், மாணவர்கள் சேர்க்கையின் போது வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம், நன்கொடை ஆகியவற்றை, வருமானத்திலிருந்து மறைத்து, வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரித்துறைக்கு, தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து, மாணவர் சேர்க்கையின் போது, அதிரடி சோதனைகளை நடத்தத் திட்டமிட்டு, வருமான வரித்துறையினர் திடீர், ரெய்டுகளை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், நாமக்கல் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னையில் உள்ள, எஸ்.ஆர்.எம்., கல்விக் குழுமங்களில் சோதனை மேற்கொண்டனர். நேற்று, சென்னையைத் தலைமையிடமாக கொண்டுள்ள மீனாட்சி அம்மாள் கல்வி நிறுவனங்களில், சோதனை நடத்தினர். காலையில் துவங்கிய சோதனை, மாலை வரை நீடித்தது. இதுகுறித்து, வருமான வரித்துறையினர் கூறியதாவது: மீனாட்சி அம்மாள் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமாக, பல் மருத்துவக் கல்லூரி, நர்சிங், பிசியோதரபி, பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மெட்ரிக் பள்ளி ஆகியன உள்ளன. இக்கல்வி நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னை, வளசரவாக்கம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும், சோதனை நடத்தப்பட்டது. மொத்தம், 10 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையை மேற்கொண்டனர். சோதனையின் போது, வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக தீவிர விசாரணையும், ஆவணங்கள் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்பட்டன. சோதனை தொடர்பான முழு விவரம், ஓரிரு நாட்களில் தெரிய வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.