அரசு விடுதியில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில், ஆதிதிராவிட நல மாணவர் விடுதி உள்ளது. இங்கு, 62 மாணவர்கள், தங்கி படிக்கின்றனர். நேற்று காலை, விடுதியில், சாம்பார், ரசத்துடன் சாதம் வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்டு விட்டு, பள்ளி சென்ற மாணவர்கள், சிறிது நேரத்தில், வாந்தி எடுத்து, மயக்கமடைந்தனர்; சிலர், வயிற்றுப்போக்கால் அவதியுற்றனர். பாதிக்கப்பட்ட, 19 மாணவர்கள், உடனடியாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், பதறியடித்தபடி, பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தனர். அரசு அதிகாரிகள், போலீசார், மாணவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மாணவர்கள் கூறுகையில், "இரண்டு, மூன்று நாட்களாக, விடுதி உணவில், அரிசி சரியாக வேகவில்லை; சாப்பிட முடியாத அளவிற்கு, அரிசி பெரிதாக இருந்தது. இரண்டு நாட்களாக வயிற்று வலி இருந்தது. நேற்று சாப்பிட்ட சாம்பாரில், கருகிய வாசனை வந்தது. சிறிது நேரத்திலேயே வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது; வகுப்பறையில் உட்கார முடியவில்லை" என்றனர். விடுதிக் காப்பாளர் சிங்கப்பாண்டி கூறுகையில், "சில மாணவர்களுக்கு மட்டும், வயிற்று வலியுடன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பிற மாணவர்கள், பாதிப்பு ஏற்பட்டதாக கூறவில்லை. இரண்டு நாட்களுக்கு முன், அரிசியை மாற்றியதால், பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்" என்றார்.