உள்ளூர் செய்திகள்

வாழ்க்கையில் லட்சியத்தை அடைய வேண்டும்: ரோசய்யா அறிவுரை

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நேற்று நடந்த முப்பெரும் விழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா பேசியதாவது: கல்வி, கலாசாரம், மருத்துவம், சமுதாய பொருளாதார கிராம முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட, ஸ்ரீசாரதா ஆசிரமத்தை பாராட்டுகிறேன். சுவாமி விவேகானந்தரின், 150வது ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் குருகுலத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதிலும், குருகுல ஆல்பத்தை வெளியிடுவதிலும், கண்காட்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதிலும் மகிழ்கிறேன். இந்த விழாவிற்காக கூடியுள்ள இளைஞர்கள், விவேகானந்தரின் தூய்மை, தெய்வீகம், தேசபக்தி இவற்றின் சேர்க்கையாவர். இன்றும்கூட, சுவாமி விவேகானந்தர் வலிமையும், தெய்வீகத்தையும் பரப்புகிறவராக உள்ளார். அவருடைய உபதேசங்கள், பரம்பரை பரம்பரையாக பல தலைவர்களுக்கு உணர்ச்சி ஊட்டுவதாக உள்ளன. புதிய இந்தியாவை உருவாக்கிய சுவாமி விவேகானந்தர் கூறுகையில், இந்த உலகின் வரலாறு, தங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள, ஒரு சில மனிதர்களின் வரலாறாக உள்ளது. மனிதனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை, தன்னம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. தன்னம்பிக்கையை பெருமளவில் கற்று கொள்ளும்போது, பயிற்சி செய்யும் போது பெரிய அளவில் துன்பங்களும், குற்றங்களும் மறைகின்றன. இளம் மாணவர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், உங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உள்ளிருக்கும் ஆற்றலை நீங்கள் உணர வேண்டும். உங்களுடைய எண்ணத்திலும், வார்த்தையிலும், செயலிலும் உடன்பாட்டு முறையில் இருக்க வேண்டும். சிரத்தையையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வதே, வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும். வலிமையான இந்தியாவை உருவாக்கிட, ஸ்ரீசாரதா ஆசிரமம் உதவுவதை பாராட்டுகிறேன். ஸ்ரீசாரதா ஆசிரமத்தின் தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா, ஸ்ரீசாரதா ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்தப்ரேம ப்ரியா அம்பா, ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், குருகுல மாணவர்கள் ஆகியோருக்கு, குருகுலத்தின் வெள்ளி விழாவில், என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, கவர்னர் ரோசய்யா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்