இந்தியாவில் ஆராய்ச்சி பல்கலைகள் துவங்க திட்டம்: யு.ஜி.சி.,
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் 15வது "ப்யூச்சரா" எனும் தொழில்நுட்ப திருவிழா, நேற்று நிறைவடைந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில், திட்ட வரைவுகள், தொழில்நுட்ப போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு விழாவில், பண்ணாரி அம்மன் குழும தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். கல்வி அறக்கட்டளை அறங்காவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பல்கலை மானியக்குழு துணை தலைவர் தேவராஜ் பேசியதாவது: கல்வியை ஆராய்ச்சியின் மூலம் தெளிவாக உணர வேண்டும். கடந்த கால ஆராய்ச்சிகளை விடுத்து, நடைமுறைக்கேற்ற ஆராய்ச்சியே உண்மை நிலையை வெளிப்படுத்தும். கடந்த 1950ம் ஆண்டுக்கு முன் சி.வி.ராமன், போஸ் ஆகியோர் ஆராய்ச்சியின் அடிப்படையாக இருந்தனர். அதற்குபின், புதிய கண்டுபிடிப்புகளும், நோபல் பரிசுகள் மீதான நாட்டமும் குறைந்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்கர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியினை தற்போது நாம் செய்துவருகிறோம். சீனாவில் ஆராய்ச்சிக்கென அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதேபோல், இந்தியாவில் ஆராய்ச்சியை மேம்படுத்தும்பொருட்டு அடுத்த மூன்றாண்டுகளில் ஆராய்ச்சி பல்கலைகள் துவங்க திட்டமிடப்பட்டடுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.