‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் அஞ்சல் தலை வெளியீடு
முதல் அஞ்சல் தலையை மத்திய அமைச்சர் ராஜா வெளியிட, முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொள்கிறார். எளிய வாழ்க்கையும், உயர்ந்த சிந்தனையும் கொண்டவராகத் திகழ்ந்த டி.வி.ராமசுப்பையர், 1908ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி நாகர்கோவில் அருகில் உள்ள, தழுவிய மகாதேவர் கிராமத்தில் பிறந்தார். திருவிதாங்கூர் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக, அவர்களுக்குக் குரல் கொடுக்க, 1951ம் ஆண்டு ‘தினமலர்’ நாளிதழை திருவனந்தபுரத்தில் தொடங்கினார். சமூகத்தில் நலிந்தோரின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பாடுபட்டார். ஒரு தமிழ் நாளிதழை திருவனந்தபுரத்தில் தொடங்கி, வளர்த்த பெருமை தினமலர் நிறுவனர் டி.வி.ஆருக்கு உண்டு. பல்வேறு இன்னல்களை மன வலிமையுடன் தாங்கிக் கொண்டு வெற்றி கண்டார். கன்னியாகுமரி மாவட்டம் உருவாக பெரும் பங்காற்றினார். தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் நாட்டிற்கும் பணி செய்வதற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ‘தமிழர்களைப் பொறுத்தவரை, தங்களது நிலையை உலகிற்கு எடுத்துரைக்க ‘தினமலர்’ எனும் மிகச் சரியான கருவியைத் தந்தவர்’ எனும் பெயரும் புகழும் பெற்றவர் டி.வி.ஆர்., இந்த ஆண்டு, அவரது நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சமூக சேவகர், மனித நேயம் படைத்தவர், தேசப்பற்று மிக்கவர்’ என்று போற்றப்படும் டி.வி.ராமசுப்பையர் நூற்றாண்டு விழாவின் அங்கமாக, அவரை கவுரவப்படுத்தும் வகையில் அவரது நினைவு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய தபால் தந்தி துறை முடிவு செய்தது. டிசம்பர் 21ம் தேதி அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது. காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில், தபால் தலை வெளியீட்டு விழா நடக்கிறது. காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்குகிறது. ‘தினமலர்’ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றுகிறார். மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜா, டி.வி.ஆர்., நினைவு அஞ்சல் தலையை வெளியிடுகிறார். முதல்வர் கருணாநிதி, டி.வி.ஆர்., நினைவு அஞ்சல் தலையைப் பெற்றுக்கொண்டு பேருரை ஆற்றுகிறார். திருவனந்தபுரம் திராவிட மொழியியல் சர்வதேச பள்ளி கவுரவ இயக்குனர் வி.ஐ.சுப்ரமணியம் சிறப்புரையாற்றுகிறார். தலைமை தபால்துறைத் தலைவர் சக்கரபர்த்தி பங்கேற்கிறார். ‘தினமலர்’ வெளியீட்டாளர் டாக்டர் இரா.லஷ்மிபதி நன்றி தெரிவித்துப் பேசுகிறார். தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ‘தினமலர் நிறுவனரின் நூற்றாண்டில் அவர் வகுத்த லட்சியப்பாதையில், உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் குரலாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்’ என்ற குறிக்கோளோடு, விழாவிற்கான ஏற்பாடுகளை ‘தினமலர்’ குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.