பிச்சை எடுத்த சிறுவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் கஜேந்திரன் மகன்கள் வெங்கடேசன், பழனிவேல், பழனிசாமி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். இவர்கள் நிலைகுறித்து தினமலர் நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது. கலெக்டர் பழனிசாமி உத்தரவின்பேரில் எஸ்.எஸ்.ஏ., திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், உதவி அலுவலர் சூரியநாராயணன், ஒருங்கிணைப்பாளர் சண்முகம் சிறுவர்களின் பெற்றோரை சந்தித்து மூவரையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். பழனிசாமி அதே பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலும், மற்ற இருவர் அரசால் அங்கீகரித்த பிளாசா தொண்டு நிறுவனத்திடமும் ஒப்படைத்து உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அதன்பின் கலெக்டர் பழனிசாமி எஸ்.எஸ்.ஏ., அலுவலர்களிடம் கூறுகையில், இதுபோன்ற நிலை மாவட்டத்தில் ஏற்படாத வகையில் கண்டறிந்து, உண்டு உறைவிடப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும். 6 முதல் 14 வயது உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மத்திய, மாநில அரசு நிதியை தாராளமாக ஒதுக்கி வருகிறது. நான் சிறுவர்களிடம் கேட்ட போது படிக்க மிகவும் ஆவலாக இருப்பதும், கலெக்டராக ஆவோம் என கூறுகின்றனர். மேலும் இதுபோல எங்காவது சிறுவர்கள் இருப்பது தெரிந்தால் உடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம்’ என்றார்.