சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
அவனியாபுரம்: மதுரை அருப்புகோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, ஆர்.எல்.,இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீசில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் தஞ்சை பிரிஸ்ட் பல்கலை துணைவேந்தர் எஸ்.மோகன் பேசுகையில், ‘அமெரிக்க ஆராய்ச்சி கல்விக்கும் இங்கு நடக்கும் ஆராய்ச்சிக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. சமையலுக்கும், இசைக்கருவியான ‘கடம்’ தயாரிக்கவும் மண்பானை பயன்படுகிறது. உடையாத, பந்துபோல மண்பானையை அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். இது தான் தற்போதைய ‘நானோ டெக்னாலஜி’, ஒரு பொருளை மாற்றுருவாக்கம் செய்துள்ளனர். இளம்பட்டதாரிகளுக்கு பத்திரிகைகள் வழிகாட்டியாக இருக்கவேண்டும். சினிமா, அரசியல், கொலை போன்ற செய்திகளை விட நேர்மறையான சிந்தனை, புதுமை, அறிவியலுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்‘ என்றார். மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசுகையில், ‘உலகம் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அதை விட பெற்றோரும், சமுதாயமும் எதிர்பார்ப்பது அதிகம். பொருளாதார வளர்ச்சியை நாடு உங்களிடம் எதிர்பார்க்கிறது. அதற்கான தைரியத்தையும், உதவிகளையும் கல்லூரி உங்களுக்கு கொடுத்துள்ளது. உங்கள் முன் உள்ள வாய்ப்புகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கு ஒழுக்கம் முக்கியம்‘ என்றார். கல்லூரி நிர்வாகி (பயிற்சி) ராம்குமார், முதல்வர் சீனிவாசன், ஆலோசகர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.