தொழிற்கல்வி பாட புத்தகங்கள்: உடனே வழங்கிட எதிர்பார்ப்பு
ஈரோடு: பிளஸ் 1 மாணவர்களுக்கு உடனடியாக தொழிற்கல்வி பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இம்மாவட்டத்தில் ஈரோடு, கோபி என, இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிளஸ் 1 சேர்க்கை நடந்தது. கடந்த 16ம் தேதி முதல் பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அந்தந்த கல்வி மாவட்டங்கள் வழியாக, ஒவ்வொரு யூனியனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. கோபி கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் உள்ளன. இம்மாணவர்களுக்கு அரசு சார்பில், இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில் தொழிற்கல்வி பாட திட்டங்கள் உள்ளன. இதில், சில பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு, குறிப்பாக கணக்கு பதிவியியல் மற்றும் தணிக்கையியல், அலுவலக செயலாண்மை புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. புத்தகங்கள் அனைத்தும் ஈரோடு சி.இ.ஓ. அலுவலகம் மற்றும் பங்களாபுதூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திலும் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் காரணமாக, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அதில் பிஸியாக உள்ளனர். இதனால் புத்தக வினியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களிடம் உள்ள புத்தகம் மூலம், தினமும் பாடங்களை நடத்தி வருகின்றனர். புத்தகம் இல்லாததால் மாணவர்களால் பாடங்களை சரிவர கவனிக்க முடிவதில்லை. ஈரோடு கல்வி மாவட்டத்தில் தொழிற்கல்வி பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன. ஆனால், கோபி கல்வி மாவட்டத்தில் மட்டும், தொழிற்கல்வி பாட புத்தகங்கள், முழுமையாக வினியோகிக்கப்படாத நிலைமை காணப்படுகிறது. மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், உடனடியாக தொழிற்கல்வி பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பாட புத்தகங்களை தாமதம் இன்றி, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கமும், மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. பள்ளிக் கல்வி துறையும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து, அனைத்து பாட புத்தகங்களையும், மாணவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.