பேராசிரியர்கள் பற்றாக்குறையால் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அரசு கல்லூரியில், பேராசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் 2013 ல் துவங்கபட்டது. தற்போது இக்கல்லூரியில் 258 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி துவங்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில் 3 முதல்வர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணி மாற்றம் மூலமாக, வேறு அரசு கல்லூரிகளிலிருந்து 4 பேராசிரியர்கள் உள்ளனர். கவுரவ பேராசிரியர்கள் 7 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், பாடங்களை நடத்த முடியாமல், தினமும் மதியமே மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. கடந்தாண்டு, வணிகவியல் துறையில் பேராசிரியர்கள் நியமிக்காமலே, மாணவர்கள் தனி ஆசிரியர்கள் மூலம் படித்து, தேர்வுகளை எழுதினர். பேராசிரியர்கள் பற்றாக்குறை தொடர்வதால், செமஸ்டர் தேர்வுகளில், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இதனால், வரும் காலங்களில் மாணவர்களின் சேர்க்கை குறையும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், "தற்காலிக பணி மாற்றத்தால், அரசு கல்லூரிக்கு வரும் பேராசிரியர்களால், முழுமையான பாடங்களையும் நடத்த முடியாத நிலை உள்ளது. இனி வரும் பேராசிரியர்கள் பாடம் நடத்தும் வித்தியாசமான முறைகளால், மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கக்கூடும். எனவே, நிரந்தர பேராசிரியர்களை நியமித்து, அரசு கல்லூரி மாணவர்கள், தனியார் கல்லூரிகளுக்கு நிகராக சாதனை படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.