சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் அரசு பள்ளி
திருவள்ளூர்: திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அரசு பள்ளி, சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. திருவள்ளூர் - திருத்தணி வழித்தடத்தில் உள்ளது, பட்டரைபெரும்புதுார். தேசிய நெடுஞ்சாலை ஓரமாக, உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். நெடுஞ்சாலையோரமாக அமைந்துள்ள இப்பள்ளியில், சுற்றுச்சுவர் இல்லை. இதனால், மாணவ, மாணவியர் அச்சத்துடனேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும், சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்திருப்பதால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் பயமும் உள்ளது. இங்குள்ள இரண்டு வகுப்பறைகள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள், மரத்தடியில் அமர்ந்து பாடம் பயில்கின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால், மாடுகள் உள்ளே வந்து மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. எனவே, இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து, பழைய கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.