உள்ளூர் செய்திகள்

தென்னிந்திய நாணவியல் கழகத்தின் வெள்ளி விழா கருத்தரங்கு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின், 25ம் ஆண்டு வெள்ளி விழா கருத்தரங்கு, இன்று துவங்கி, இரண்டு நாள் நடக்கிறது. தஞ்சாவூர் தமிழ் பல்கலையின், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் சார்பில், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின், 25வது ஆண்டு வெள்ளி விழா கருத்தரங்கு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. துவக்க விழாவுக்கு, பல்கலை துணைவேந்தர், திருமலை தலைமை வகிக்கிறார்; தென்னிந்திய நாணயவியல் கழக, உள்ளூர் செயலரும், தமிழ் பல்கலை பேராசிரியருமான, ராசவேலு வரவேற்கிறார். விருது: நாணயவியல் குறித்த ஆய்வுகளுக்கு பெரும் பங்காற்றியமைக்காக, தென்னிந்திய நாணயவியல் கழகத் தலைவரும், ’தினமலர்’ ஆசிரியருமான, டாக்டர் இரா.கிருஷ்ண மூர்த்திக்கு, தஞ்சை தமிழ் பல்கலை சார்பில், விருது வழங்கப்படுகிறது. விருதை, மாவட்ட கலெக்டர் சுப்பையன் வழங்குகிறார். தென்னிந்திய நாணயவியல் கழக ஆய்வு இதழை, தமிழ் பல்கலை பேராசிரியர், சுப்பராயலு வெளியிடுகிறார். தென்னிந்திய நாணயவியல் கழகச் செயலர் நரசிம்மமூர்த்தி, பேராசிரியர் ராசு, இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் சத்திய மூர்த்தி, சென்னை பல்கலை முன்னாள் பேராசிரியர் சண்முகம், ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் ராஜா ரெட்டி உட்பட, பேராசிரியர்கள் மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட நாணயவியல் ஆய்வாளர்கள் பங்கேற்க உள்ளனர். வெள்ளி விழா கருத்தரங்கு குறித்து, தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை, நிருபர்களிடம் கூறியதாவது: பழங்கால நாணயங்கள் மூலம், சங்க கால இலக்கியங்கள், மக்களின் வாழ்க்கை முறை ஆகிய வற்றை, நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. பழங்கால நாணயங்கள் குறித்தும், நாணயவியல் குறித்த ஆய்வுகளுக்கும், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் தலைவர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெரும்பங்காற்றியுள்ளார். அதற்காக, அவருக்கு தமிழ் பல்கலை சார்பில், விருது வழங்கப்படுகிறது. 150க்கும் மேற்பட்ட...: தமிழ்நாடு நாணயவியல் கழகம், நாளடைவில், தென்னிந்திய நாணயவியல் கழகமாக விரிவுபடுத்தப்பட்டது. இதன் முதலாவது கருத்தரங்கு, தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் நடந்தது. தற்போது, 25வது ஆண்டு வெள்ளி விழா கருத்தரங்கு, தஞ்சை தமிழ் பல்கலையில் நடக்கிறது. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட தென்னிந்தியாவுக்கு உட்பட்ட, 150க்கும் மேற்பட்ட நாணயவியல் ஆய்வாளர்கள் பங்கேற்று, ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்