உதவி பெறும் பள்ளிகளில் போலி மாணவர் சேர்க்கை!
இதில், திடீர் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்தில், 1, 498 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 120க்கும் மேற்பட்டவை, நிதி உதவி பெறும் பள்ளிகளாக, தனியார் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகிறது. அதாவது பள்ளியில் ஆசிரியரின் சம்பளம், மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட அனைத்தையும், தமிழக அரசு வழங்கிவிடும். நிர்வாகம் மட்டும் தனியார் வசம் இருக்கும். இப்பள்ளிகளிலும், அரசு பள்ளிகளை போன்றே, ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது. அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களை நியமிக்க, பணிநிரவல் நடத்தப்படுகிறது. ஆனால், உதவி பெறும் பள்ளிகளில், அப்படி நடத்தப்படுவதில்லை. உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் போது, அதிலிருந்து ஆசிரியர் பணியிடம் நீக்கப்பட்டால், அதில் பணிபுரியும் ஆசிரியர், வேறு உதவி பெறும் பள்ளிக்கே செல்ல முடியும். வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி வரும் என்பதால், ஆசிரியர் பணியிடத்துக்கான எண்ணிக்கையில், மாணவர்கள் உள்ளதை போன்று, பல பள்ளிகளில், போலி மாணவர் பெயர் பட்டியலை பராமரித்து வருகின்றனர். இதற்கு, ஆய்வு அலுவலரான, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் உடந்தையாக இருப்பதால், பல உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடம் உபரியாக உள்ளது. இதனால், அரசு பணம் விரயமாவதை தடுக்க, அனைத்து பள்ளிகளிலும், ஆய்வு நடத்தி, உதவி பெறும் ஆசிரியர் பணியிடங்களையும், பணிநிரவல் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.