உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் கண்டித்ததால் எலி மருந்து சாப்பிட்ட மாணவிகள்

பரமக்குடி: பரமக்குடி அரசு பெண்கள் பள்ளியில் 4 மாணவிகள் பள்ளி வளாகத்தில் எலி மருந்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், கோகிலா, 17, பிரித்தா, 17, கவுரி, 17, புவனேஸ்வரி, 17. நண்பர்களான இவர்கள் அனைவரும் பிளஸ் 2 படிக்கின்றனர். சில நாட்களாக பள்ளிக்கும், தேர்விற்கும் வராமல் இருந்துள்ளனர். இதனால் மாணவிகள் 4 பேரையும் அழைத்து ஆசிரியர்கள்கள் கண்டித்துள்ளனர். மனமுடைந்த மாணவிகள் பள்ளிக்கு அருகில் உள்ள மளிகை கடையில் விற்கப்படும் எலி மருந்தை வாங்கி பள்ளி வளாகத்தில் சாப்பிட்டனர். சக மாணவிகள் மூலம் தகவலறிந்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவிகளை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. மாணவிகளிடம் டி.எஸ்.பி., (பொ) கணபதி விசாரணை நடத்தினார். பள்ளிக்கு செல்லாததால் டீச்சர்கள் அடித்ததாகவும், விரக்தியில் மருந்து சாப்பிட்டதாகவும் மாணவிகள் தெரிவித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறிய போது: மாணவிகள் சில நாட்களாக வகுப்பிற்கு வரவில்லை. டீச்சர்கள் கண்டித்துள்ளனர். இதற்காக மருந்து சாப்பிட்டுள்ளனர். நான் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினேன், என்றார். அரசு தலைமை டாக்டர் முனியரசு கூறிய போது: மாணவிகள் எல்லோ பாஸ்பரஸ் எனப்படும் எலிக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டுள்ளனர். இது கிட்னி மற்றும் கல்லீரலை பாதிக்கும். உடனடியாக சிகிச்சைக்கு வந்ததால், தற்போது எந்த பிரச்சினையும் இல்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்