விடுமுறை குழப்பத்தில் அதிகாரிகள்; மழையில் நனைந்தனர் மாணவர்கள்
திண்டுக்கல்: பள்ளிகளின் விடுமுறை குறித்து முறையான முடிவு எடுக்க முடியாமல், மாவட்ட அதிகாரிகள் குழப்பம் அடைந்ததால், மாணவர்கள் பலர் நனைந்தவாறு வீடுதிரும்பினர். நேற்று காலையில் இருந்தே நத்தம் தவிர திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் சாரல், கனமழை என விட்டுவிட்டுப் பெய்தது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என மாணவர், பெற்றோர் எதிர்பார்த்தனர். விடுமுறை விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும், கல்வி நிர்வாகமும், அவர்கள் முடிவெடுக்கட்டும் என ஒருவருக்கொருவர் தாமதப்படுத்தினர். இந்நிலையில் அந்தந்த பள்ளி நிர்வாகங்கள், தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கக்கட்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துவிட்டது. தலைமை ஆசிரியர்களால் உடனே முடிவு எடுக்க முடியவில்லை. இந்நிலையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய மெட்ரிக் பள்ளிகள் விடுமுறை அறிவித்துவிட்டன. இதையடுத்து மற்ற பள்ளிகளும் விடுமுறை குறித்து அறிவிக்காமல் மாலை 2.30 மணிக்கே மாணவர்களை வீட்டுக்கு அனுப்பினர். இதனால் மாணவர்கள் பலர் மழையில் நனைந்தவாறு வீடுதிரும்பினர். பெற்றோர்கள் கூறுகையில், முறையான அறிவிப்பை மாவட்ட நிர்வாகமே எடுக்க வேண்டும். காலையிலேயே அறிவித்திருந்தால் மாணவர்கள் மழையில் நனைந்திருக்க மாட்டார்கள், என்றனர்.