முறைகேடு இல்லாமல் சேர்க்கை; சென்டாக் கன்வீனர் தகவல்
புதுச்சேரி: சென்டாக் மாணவர் சேர்க்கை முறைகேடு இல்லாமல் நடத்தப்பட்டுள்ளது என, சென்டாக் விளக்கம் அளித்துள்ளது. சென்டாக் கன்வீனர் ராகேஷ்சந்திரா விடுத்துள்ள செய்திக் குறிப்பு: சென்டாக் மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடந்தது. 408 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், 130 பி.டி.எஸ்., மாணவர்கள், 42 ஆயுர்வேத சீட்டுகள், 31 கால்நடை அறிவியல் மருத்துவர் இடங்கள், 345 நர்சிங் சீட்டுகள், 20 பி.பி.டி.,இடங்கள். 16 எம்.எல்.டி.,இடங்கள், 2678 பி.டெக்.,இடங்கள் இந்தாண்டு சென்டாக் மூலம் நிரப்பப் பட்டுள்ளன. வருவாய் துறை அதிகாரிகளை கொண்டு அனைத்து மாணவர் களும் சமர்ப்பித்த சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. முதன் முறையாக சென்டாக் மூலம் இடம் கிடைத்த மாணவர்களின் புகைப்படத்துடன் மாணவர் சேர்க்கை பட்டியல், www.centaconline.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்டாக் மாணவர் சேர்க்கை முழுவதும் மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தாண்டு சென்டாக் மாணவர் சேர்க்கைக்காக குடியிருப்பு சான்றிதழ் சமர்ப்பித்த ஆறு மாணவர்களின் சான்றிதழ்கள் மறு ஆய்வு செய்ததில் போலியானது என தெரியவந்தது. இந்த சான்றிதழ்களை சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ரத்து செய்தார். போலி சான்றிதழ்களை சமர்ப்பித்த மாணவர்கள் மீது சென்டாக் சி.பி.சி.ஐ.டி.,போலீசில் புகார் அளித்தது. இடம் கிடைத்த கல்லுாரியில் இருந்து மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்டாக் மாணவர்களுக்கு குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட எந்த ஏனைய சான்றிதழ்களை வழங்கவில்லை. சம்பந்தப்பட்ட துறையினரே மாணவர்களின் சான்றிதழ் உண்மையானவையா அல்லது போலியானதா என்று ஆராய வேண்டும். மதிப்பெண் சான்றிதழ், தேவையான சான்றிதழ்கள் அடிப்படையில் நேர்மையான முறையில் மாணவர்களுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதே சென்டாக் முதன்மை பணி. கல்லுாரிகளில் கூடுதல் இடங்களை பெறும் வேலை சென்டாக் வரம்பிற்குட்பட்டது இல்லை. சென்டாக்கில் முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.