இந்திய மாணவர்களுக்கு கோடை கால மருத்துவ பயிற்சி!
சென்னை: ரஷ்யாவின் கசான் மாநில மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை மற்றும் புதுசேரியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் அறிவுசார் ஒப்பந்தம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அறிவுசார் ஒப்பந்தம் ரஷ்யாவின் முன்னணி ஐந்து பல்கலைக்கழகங்களுள் ஒன்றான கசான் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில், 500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ரஷ்யாவில் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பும் மாணவர்கள் தங்களது தாய் நாட்டிலேயே பயிற்சியை மேற்கொண்டு மருத்துவ நிலவரங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம், அப்பல்லோ மருத்துவமனை, ஸ்ரீ ராமசந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் அறிவுசார் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பின் தென்னிந்திய துணை தூதர் திரு. மிக்கேல் ஜே. ஜோர்பச்சேவ் கூறுகையில்; நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் கோடை விடுமுறையில் இந்தியா வரும்போது பயிற்சி அளிக்கப்படும். மேலும், கசான் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் இந்திய கல்வி நிலையங்களில் கோடை கால மருத்துவ பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றார். ஸ்டடி அப்ராடின் நிர்வாக இயக்குன்ர் திரு. சி. ரவிச்சந்திரன், டாக்டர் அலெக்ஸி ஸ்டானிஸ்லவோவிச் சோசிநவ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.