உள்ளூர் செய்திகள்

தேர்வு நேரத்தில் விழா; கல்வித்துறை உத்தரவால் அதிருப்தி

சேலம்: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், பள்ளிகளில் மார்ச் 21, 22 தேதிகளில் பசுமை தினம் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மார்ச், 21ம் தேதி உலக வனநாள் மற்றும் மார்ச், 22ம் தேதி உலக தண்ணீர் தினம் என பசுமை தின விழாக்கள் கொண்டாடப்படுகிறது. வனம் மற்றும் தண்ணீரின் தரத்தை பாதுகாப்பதன் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில், பள்ளிகளில் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய பசுமை படை மாணவர்கள் மூலமாக, பேரணி, மனித சங்கிலி, வினாடிவினா, கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி மற்றும் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச், 21ம் தேதி, பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வும், மார்ச், 22ம் தேதி, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தேர்வும் நடைபெற உள்ளது. பள்ளியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வுப்பணிக்கு செல்லும் நிலையில், இந்நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிக்கல் உள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்