உள்ளூர் செய்திகள்

உயிரியல் தேர்வு வினாத்தாள் கடினம்; மாணவர்கள் தடுமாற்றம்

சேலம்: பிளஸ் 2 உயிரியல் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் தடுமாற்றம் அடைந்தனர். தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், உயிரியல் தேர்வு நேற்று நடந்தது. அதில், விலங்கியல் பாடப்பகுதிகள் கடினமாகவும், மாணவர்கள் எதிர்பார்க்காத கிரியேடிவிட்டி வினாக்களும், அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. இதனால், சராசரி மாணவர்கள், விலங்கியல் பகுதியில் தேர்வெழுத, அதிகம் தடுமாறினர். முதுகலை விலங்கியல் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: உயிரியல் தேர்வின், தாவரவியலில், 75 மதிப்பெண்களும், விலங்கியலுக்கு, 75 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. நேற்று நடந்த, அந்த தேர்வில், விலங்கியலில், கிரியேடிவிட்டி வினாக்கள் அதிகம் இடம்பெற்றன. ஒரு மதிப்பெண் வினாக்களில், ஒன்பது வினாக்கள் கிரியேடிவிட்டி வினாக்களாக அமைந்திருந்தன. மூன்று மதிப்பெண், 10 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும், பாடத்தின் உள்பகுதியில் இருந்தும், சுற்றி வளைத்தும் கேட்கப்பட்டிருந்தது. பாடத்தை முழுமையாக புரிந்து படித்த மாணவ, மாணவியர் மட்டுமே, அனைத்துக்கும் பதில் அளிக்க முடியும். ஐந்து மதிப்பெண் வினாக்கள் தான், எதிர்பார்த்த மற்றும் புத்தகத்தில் உள்ள வினாக்களாக அமைந்திருந்தன. கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில், மருத்துவ கட் ஆப் குறையும் அளவுக்கு, உயிரியல் மதிப்பெண்கள் அமைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்