பள்ளி மாணவன் கொலை; குற்றப்பத்திரிகை தயாரிப்பு தீவிரம்
திருப்பூர்: திருப்பூர் தனியார் பள்ளி வளாகத்தில், சக மாணவனால், ஒன்றாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த, வங்கி உதவி மேலாளர் அருண் பிரசாத்,- உதயபிரபா தம்பதி மகன் ஸ்ரீசிவராம், 5; கதிரவன் மெட்ரிக்., பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தான். கடந்த, ஜன., 27ம் தேதி, இதே பள்ளியில் படித்த ஆறாம் வகுப்பு மாணவன் தாக்கியதில், உயிரிழந்தான்.சம்பவம் குறித்து, சென்ட்ரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறாம் வகுப்பு மாணவனை கைது செய்தனர். திருப்பூர் ஜே.எம்., எண் 1 மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின், கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.சாட்சிகளை தொகுத்து, குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சிறுவனின் உடல் மற்றும் மன நிலை குறித்த மருத்துவர் அறிக்கை, தடயவியல் நிபுணர்கள் சமர்பித்த ஆதாரங்களை கொண்டு, மருத்துவ அறிக்கையை பெறும் முயற்சியிலும் உள்ளனர். சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கை விசாரிக்க வேண்டிய, கோர்ட் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.