பெற்றோர் ஓட்டளிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் உறுதிமொழி
சூலுார்: பெற்றோரிடம் ஓட்டளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம் என, பள்ளி மாணவ, மாணவியர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். வரும் சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் கமிஷன், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறது. கண்ணம்பாளையம் பேரூராட்சி துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. சூலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி விஜயலட்சுமி தலைமை வகித்தார். பெற்றோரிடம், ஓட்டளிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கட்டாயம் ஓட்டளிக்க வைப்போம் என, மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதேபோல், கருமத்தம்பட்டியில் விழிப்புணர்வு தெரு நாடகம் நடத்தப்பட்டது.