பெங்களூரு சட்ட மாணவியர் ’ஷார்ட்ஸ்’ அணிந்து போராட்டம்
பெங்களூரு: கல்லுாரிக்கு, ஷார்ட்ஸ் அணிந்து வந்த மாணவியை, தகாத வார்த்தைகளால் கண்டித்த பேராசிரியருக்கு பாடம் கற்பிக்க, கல்லுாரி மாணவியர், ஷார்ட்ஸ் அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்தப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் உள்ளது. தேசிய சட்டக் கல்லுாரி பல்கலை. இங்கு, மூன்றாம் ஆண்டு சட்டம் படிக்கும் மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன், வகுப்பறைக்கு ஷார்ட்ஸ் அணிந்து வந்திருந்தார். அதை வகுப்பறையிலேயே கண்டித்தார் ஒரு பேராசிரியர். இதனால் அவமானம் அடைந்த அந்த மாணவி, வகுப்பு முடிந்த பிறகு, பேராசிரியரை நேரில் சந்தித்து முறையிட்டார். அப்போது, அந்தப் பேராசிரியர், அந்தப் பெண்ணின் ஒழுக்கம் குறித்து தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மற்ற மாணவியரும், அடுத்த நாள், வகுப்பறைக்கு, ஷார்ட்ஸ் அணிந்து வந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இது தொடர்பாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில், அந்த பேராசிரியரிடம் விசாரணை மேற்கொள்ள, பல்கலை துணைவேந்தர், குழு அமைத்துள்ளார். எப்படி உடையணிந்து வர வேண்டும் என்பது குறித்து பேசுவதற்கு பேராசிரியருக்கு உரிமையில்லை. இது, தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என, சமூக வலைதளத்தில் மாணவியர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.