உள்ளூர் செய்திகள்

கல்விக் கடன்: ரிசர்வ் வங்கியில் புகார் செய்யுங்கள்!

சென்னை உள்ளகரத்தைச் சேர்ந்த வாசு, தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் ஹரிணி, பிளஸ் 2 தேர்வில் கணிதத்தில் 200க்கு 200 உட்பட மொத்தம் 1,042 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்று, ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் இ.ஐ.இ., பிரிவில் சேர்ந்துள்ளார். முதலாமாண்டு கல்விக் கட்டணமாக 32 ஆயிரத்து 500 ரூபாயை கல்லூரியில் செலுத்தியுள்ளார். தற்போது இம்மாணவிக்கு வங்கியில் கல்விக் கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவி ஹரிணியின் தந்தை வாசு கூறியதாவது: என் மகள் கல்விக்காக ஆண்டு கல்விக் கட்டணம் 32 ஆயிரத்து 500 ரூபாய், மெஸ் கட்டணம் 17 ஆயிரத்து 500 ரூபாய், போக்குவரத்துக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என, ஒரு ஆண்டிற்கு 75 ஆயிரம் ரூபாய் செலவாகும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தவிர, புத்தகத்திற்கு கூடுதலாக செலவாகும். நான் மாதம் 5,500 ரூபாய் சம்பளம் பெறுகிறேன். தனியார் பள்ளியில் வேலை செய்யும் என் மனைவி 4,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். வங்கியில் கல்விக் கடனுக்கு விண்ணப் பித்தபோது, ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு வங்கி என ஒதுக்கியிருப்பதாகக் கூறினர். எங்களது வீடு உள்ள பகுதிக்கான பொதுத்துறை வங்கிக்கு சென்று கல்விக் கடனுக்கு விண்ணப்பித்தபோது, சம்பளம் குறைவாக இருப்பதால், மூன்றாம் நபர் உத்தரவாதம் அளித்தால் தான் கல்விக்கடன் வழங்குவோம் என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். எனது மகளின் உயர் கல்விக்கு யாராவது பண உதவி செய்தாலோ அல்லது வங்கிக் கடன் கிடைக்க உதவினாலோ தான் அவள் படிப்பை தொடர முடியும். இவ்வாறு வாசு கூறினார். ஹரிணியின் உயர்கல்விக்கு உதவ விரும்புபவர்கள், அவளது தந்தை வாசுவை 95661 33212 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விதிமுறை என்ன?: வங்கிகளில் நான்கு லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் பெற, மாணவர் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், நான் செலுத்துகிறேன் என பெற்றோர் கையெழுத்திட்டு தர வேண்டும். நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கல்விக் கடனுக்கு பிணை தேவையில்லை. ஆனால், பல தனியார் மற் றும் பொதுத் துறை வங்கிகளில், சொத்துப்பிணை அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதம் கேட்கின்றனர். இதனால், தகுதியுள்ள பல மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைப்பதில்லை. இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கல்விக் கடனுக்கு எவ்வித உத்தரவாதமும் தேவையில்லை. எந்த வங்கியாவது நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கல்விக் கடனுக்கு உத்தரவாதம் கேட்டால், ரிசர்வ் வங்கியில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர். மாணவர்கள் கல்விக் கடன் கிடைக்காதது தொடர்பான தங்களது புகார்களை, The Banking Ombudsman Scheme C/O Reserve Bank of India Fort Glacis Chennai 600 001. என்ற முகவரியில் தெரிவிக்கலாம். மேலும் 044 25399170, 25395963, 25399159 என்ற தொலைபேசி எண் களிலும், 044-25395488 என்ற பேக்ஸ் எண்ணிலும் புகார் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்