பீஸ் கட்ட முடியாவிட்டால் தற்கொலை தான் தீர்வா...?
உயர்கல்வி கற்க வங்கிக் கடன் உட்பட பல்வேறு உதவிகள் செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை, ராயப்பேட்டையில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டுக்குரிய கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்திய நிலையில், அவரது தந்தை உடல் நலக் குறைவால் இறந்து போயுள்ளார். மருத்துவ செலவு கை மீறிப் போக, இரண்டாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி தவித்த அந்த ஆர்க்கிடெக்சர் படித்த மாணவி, தூக்கில் தொங்கி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் வங்கிக் கடன் கிடைக்காத விரக்தியில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்போது மருத்துவமனையில் இருக்கிறார். இதுபோன்று தலைதூக்கும் தற்கொலை முயற்சிகள், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு கல்லூரியும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வாங்காமல் இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று அண்ணா பல்கலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 மாணவர்களில் பத்து சதவீதம் பேருக்கு இலவச கல்விக் கட்டணம் வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மூன்று பேர், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஊனமுற்றோர் என ஆறு பேருக்கு இச்சலுகை கிடைக்கிறது. கவுன்சிலிங் நடக்கும் போதே, வங்கிகள் ஸ்டால் அமைத்து கல்விக் கடன் குறித்து விளக்குகின்றன. நான்காண்டு படிப்பு முடித்து, மேலும் ஓராண்டு வாய்ப்பு தந்து பிறகு தான் கல்விக் கடன் வசூலிக்கப்படுகிறது. தன்னார்வ அமைப்புகளும் தானாகவே முன்வந்து கல்வி உதவித் தொகை வழங்குகின்றன. சில கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறம் இருந்தாலும், பெரும்பாலான கல்லூரிகள் நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்கின்றன. உயர் கல்விக் கான கட்டணம் செலுத்த முடியவில்லை என்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது சரியான முடிவல்ல. மனரீதியாக இளைஞர்கள் தன்னம்பிக்கை யை வளர்க்க வேண்டும். கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கையே இல்லை. அதை எப்படி சமாளிப்பது என்பதில் தான் வாழ்க்கை இருக்கிறது. இந்த தற்கொலை தவறான முடிவு. சமீபத்தில் தந்தையை இழந்த அந்தப் பெண்ணின் தாயார், தனது இரண்டு மகள்களைத் தான் வாழ்க்கை என்று நினைத்திருப்பார். பொறுப்பாக இருக்க வேண்டிய மூத்த பெண், விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கூறுவதை விடுத்து, அவர் முயற்சி செய்திருக்கலாம். இவ்வாறு மன்னர் ஜவகர் தெரிவித்தார். இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரி கூறியதாவது: ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 பேரில் அதிகபட்சம் ஆறு பேருக்கு இலவச கல்விக் கட்டணத்திற்கு வலியுறுத்துகிறோம். எத்தனை பேருக்கு இலவச கல்விக் கட்டணம் வழங்குகின்றனரோ, அதே எண்ணிக்கைக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருவாய் கொண்டுள்ள குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள், தாசில்தாரிடம் சான்று பெற்று இந்த சலுகையைப் பெறலாம். இரண்டு மாணவிகள் எவ்வித சான்றும் இன்றியும், ஒரு ஊனமுற்ற மாணவர் மருத்துவ சான்று காண்பித்தும் இந்த இலவச கல்வியைப் பெறலாம். படிப்பு முடியும் காலம் வரை இலவச கல்விக் கட்டண சலுகை பெறலாம். கடந்தாண்டு 344 தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த சலுகையை வழங்கின. இந்தாண்டு 433 கல்லூரிகள் தானாகவே முன்வந்து இந்த சலுகையை வழங்கியுள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து, கல்வி அறக்கட்டளை நடத்தி வரும் ஒருவர் கூறுகையில், பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அறக்கட்டளைகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களுக்கு ஸ்பான்சர் செய்து வருகின்றன. ஏழ்மை நிலை குறித்து, பத்திரிகைகளில் வரும் செய்தியைக் கண்டு, தனிநபர்களும் உதவி செய்து வருகின்றனர்; சம்பந்தப்பட்ட கல்லூரியும் உதவுகிறது என்றார். குடும்ப சூழ்நிலை காரணமாக, கல்விக் கட்டணம் கட்ட முடியாதவர்கள் முதல்வர் பொது நிவாரண நிதி, தனியார் அறக்கட்டளைகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரிடம் மனு செய்தால் அங்கிருந்தும் உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனவே, ஏழை மாணவர்கள் தற்கொலை தான் தீர்வு என்ற முடிவை எடுக்கக் கூடாது என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.