ஆய்வு அறிக்கைப்படி நிகர்நிலைப் பல்கலைகள் மீது நடவடிக்கை!
சென்னையில் எஸ்.எஸ்.என்., கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையை வழங்கிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபில் நிருபர்களிடம் பேசும்போது இத்தகவலைத் தெரிவித்தார். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்யப்பட்ட குழு அண்மையில் அறிக்கை அளித்துள்ளது. அந்த பரிசீலனை அறிக்கையை ஆய்வு செய்து அதன் சிபாரிசுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பக் கல்வி குறித்து அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் தலைவர் ஆர்.ஏ. யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.நாட்டில் உள்ள சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோன்ற சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன. நாட்டில் பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கான நடைமுறைகள் குறித்து மறுசிந்தனை செய்ய வேண்டியுள்ளது என்று கல்லூரி விழாவில் பேசும்போது கபில்சிபல் குறிப்பிட்டார்.பள்ளிகளில் மாணவர்களுக்குக் கல்வி கற்றுத்தரப்படும் முறைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். மிக அதிக மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமே உயர்கல்வியின் நோக்கம் கிடையாது. புத்தகங்களையும் தாண்டிய நிலையில் நமது கல்வி முறை இருக்க வேண்டும். கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் தங்களது விருப்பத்திற்கேற்ற வகையில் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.உலகளாவிய தொடர்புக்கு உதவும் வகையில் உள்ள ஆங்கிலத்திற்கு எதிராக திமுக அரசு இல்லை என்று குறிப்பிட்ட தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, தமிழ் மொழி வழிக் கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்தினார். ஆசிரியர்கள் தங்களது கல்வித்திறனை தொடர்ந்து உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.எஸ்.எஸ்.என்., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சிவ நாடார், கல்வி நிறுவனங்களின் தலைவர் கலா விஜயகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.