கல்வியின் அவசியம் புரிந்தால் வருகை பதிவேடு தேவையில்லை!
வேங்கை எனும் நூலை வெளியிட்டு துணைவேந்தர் ராஜேந்திரன் பேசியதாவது: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை, டில்லி பல்கலை ஆகியவற்றில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வருகை பதிவேடு என்பதில்லை. போதிய நாட்கள் வருகை இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்பதில்லை. அங்குள்ள மாணவர்கள் படிப்பதற்காக வருகின்றனர். அவர்களுக்கு வருகை பதிவேடு அவசியமில்லை. அவர்கள் மாணவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோல, ஆசிரியர்களும் நேராக வகுப்புக்கு சென்று சொல்லிக் கொடுக்கின்றனர். மாலையில் மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக பல மாணவர்கள் பேராசிரியர்களிடம் நேரத்தை ஒதுக்கிப்பெற்று வைத்துள்ளதால், ஆசிரியர்களும் எங்கும் செல்வதில்லை. மாணவர்களிடம் தங்களது தன்மானத்தை காக்கவும், தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்ளவும் ஆசிரியர்கள் நூலகங்களுக்கு சென்று தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் தேவையான சூழலில் குறிப்பிட்ட மாணவர்களுக்கு தேர்வுக்கான வினாத்தாளை கொடுத்து தேர்வுக்கு முன்னதாகவே விடைத்தாளில் எழுதிப் பெற்றுக் கொள்கின்றனர். அதே வினாத்தால் குறிப்பிட்ட நாளில் நடக்கும் தேர்விலும் வழங்கப்படும். அங்குள்ள மாணவர்கள் தங்கள் மீதும், தனது படிப்பின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால், ஏற்கனவே வெளியான வினாத்தாளை பிற மாணவிகள் அறிந்து கொள்ளக்கூட விரும்புவதில்லை. அதேபோன்ற சூழல் இங்கு அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதுபற்றி விசாரித்தால், அங்குள்ளவர்கள் அனைவரும் மூன்றாம், நான்காம் தலைமுறையினர் பல்கலை வருகின்றனர். அவர்களுக்கு படிப்பின் அவசியத்தை அறிந்து படிப்பை தேடி வருகின்றனர். கல்வியின் அவசியம் புரிந்தால் வருகைப்பதிவேடு தேவையில்லை. இங்கு கிராமப்புற மாணவர்களுக்கு இதுதான் முதல் தலைமுறை கல்வி. இவர்களும் இன்னும் சில தலைமுறைகள் மாறுபோது இங்கும் வருகைப்பதிவேடு அவசியமில்லாமல் போகும். இவ்வாறு துணைவேந்தர் ராஜேந்திரன் பேசினார். அமைப்பாளர் முனைவர் பரிமளா வரவேற்றார். ஆசிரியர் பேரவை தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக துணைத்தலைவர் அறிவுடைநம்பி, முனைவர் உதயசூரியன் உட்பட பலர் பங்கேற்றனர். அமைப்பாளர் ஆனந்த் அரசு நன்றி கூறினார். வெற்றிச்செல்வன் தொகுத்து வழங்கினார்.