அரசு பள்ளியில் மதிய உணவு வழங்க கோரிக்கை
புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு தடையில்லாமல் மதிய உணவு வழங்க வேண்டும் என தலைமைச் செயலரிடம் பா.ஜ., மனு அளித்துள்ளது.புதுச்சேரி நகர மாவட்ட பா.ஜ., தலைவர் வக்கீல் அசோக்பாபு தலைமையில் நிர்வாகிகள், தலைமைச்செயலர் அஸ்வனிகுமாரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்பு நடக்கிறது. ஆனால் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படவில்லை. இதனால் பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்கள் பசியோடு செல்கின்றனர். படிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்த முடியவில்லை. மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தாமல் மாநில அரசும், கல்வித் துறையும் அலட்சியமாக உள்ளது கவலை அளிக்கிறது. இவ்விஷயத்தில் தலைமைச்செயலர் நேரடியாக தலையிட்டு, மாணவர்களுக்கு மதிய உணவு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.சந்திப்பின்போது பா.ஜ., மாவட்ட துணை தலைவர் விஜயரங்கம், மாவட்ட செயலாளர்கள் விஜய், மணிமாறன், உப்பளம் தொகுதி பொறுப்பாளர் கணேஷ் ராவ், கோபி, மகேஷ் உடனிருந்தனர். நகர மாவட்ட பா.ஜ., தலைவர் அசோக்பாபு கூறுகையில், கோரிக்கையை கேட்டறிந்த தலைமைச்செயலர், உடனடியாக கல்வித் துறை செயலர், இயக்குனரை தொடர்பு கொண்டார். பள்ளி அரை நாள் திறக்கப்படும் என்பதற்காக மாணவர்களை பட்டினியாக அனுப்பக் கூடாது. மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்&' என தெரிவித்தார்.