செயல்வழி கல்வி: கோவா கல்வியாளர்கள் தமிழகம் வருகை
இந்நிலையில், இக் கல்வி முறையை பார்வையிட, கோவா மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் கோவை வருகின்றனர்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தமிழகத்தில் முதல் வகுப்பில் இருந்து நான்காம் வகுப்பு வரையிலும் செயல்வழிக் கற்றல் (ஏ.பி. எல்.,) கல்வி முறையும், 7,8,9 வகுப்புகளில் படைப்பாற்றல் (ஏ.எல். எம்.,) கல்வி முறையும் கற்பிக்கப்பட்டு வருகிறது.அனைவருக்கும் கல்வி இயக்கத் தின் முன்னாள் இயக்குனர் விஜயகுமார் அறிமுகம் செய்த இக்கல்வி முறை, பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்புதிய கல்வி முறைகளால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் உயர்ந்துள்ளது.இடைநிற்றல் சதவீதம் குறைந்துள்ளது. மாணவர்களின் படைப்பாற்றல் திறன் உயர்ந்துள்ளது. இதன் சிறப்புகளை அறிந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, சட்டீஸ்கர், மிசோரம், சண்டிகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கல்வியாளர்கள் தமிழக பள்ளிகளை பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர்.இதன் அடிப்படையில் சண்டிகார், சட்டீஸ்கர், மிசோரம் மாநில பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் கல்வித் திட்டம் தற்போது செயல் படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவை சேர்ந்த கல்வியாளர்களும் தமிழக பள்ளிகளை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இந்த வரிசையில் அடுத்தபடியாக கோவாவை சேர்ந்த கல்வியாளர் குழுவினர் சென்னை வருகின்றனர். சென்னை நகர அரசுப் பள்ளிகளை பார்வையிடும் இக்குழுவினர், நவ., 11ல் கோவை வருகின்றனர். இங்குள்ள அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் கல்வி முறை செயல்படும் முறையை நேரில் கண்டறிந்த பின், தங்கள் மாநிலத்திலும் புதிய கல்வி முறையை புகுத்த திட்டமிட்டுள்ளனர். இத்தகவலை, அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் தெரிவித்தனர்.