உள்ளூர் செய்திகள்

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

நாசா, இஸ்ரோவை மாணவர் அறியட்டும்: மாணவர்கள் விஷயத்தில் இந்தளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்ளும் தமிழக அரசுக்கு, உண்ண உணவு, உடை, படிக்க புத்தகம், பஸ் பாஸ், ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம், இவ்வளவு கொடுத்தும் தமிழகத்தின் தமிழ் வழிக் கல்வி அல்லல்படுகிறது. இதில் விசேஷம் என்னவென்றால், தமிழக ஆசிரியர்கள், ஆங்கிலப் பள்ளிகளில் பணிபுரிய விரும்புவதில்லை.ஆனால், தங்கள் குழந்தைகளை மட்டும் ஆங்கிலம் படிக்க அனுப்பி வைப்பர். ஆசிரியர்களுடைய பிள்ளைகளும் அதே பள்ளியில் தான் படிக்க வேண்டும் என உத்தரவிடும் போது, தனது பிள்ளைகளுக்காகவாவது சுயநலம் பிடித்த ஒரு சில ஆசிரியர்கள் மற்ற பிள்ளைகளுக்கும் ஒழுங்காக பாடம் நடத்துவர்.ஆங்கில மோகம் அதிகரித்துள்ள இவ்வேளையில், "ஆங்கிலம் என்பது அறிவு&' என்றே நிறைய பேர் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், ஆங்கிலம் என்பது ஒரு மொழி என்பது பலருக்கு புரியவில்லை. இதுவே புரியாத போது, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பரீட்சைகளை தமிழிலும் எழுதலாம் என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்க போகிறது.சமச்சீர் கல்வியில் முதலாவதாக செய்ய வேண்டியது ஆசிரியர்கள் சீர்திருத்தம் வேண்டும். தனியார் கோச்சிங் சென்டர்கள் செய்கிற வேலையை தமிழக அரசு செய்து தர வேண்டும். இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்.ஆனால், தமிழக கலைக் கல்லூரியில் பயின்ற ஒரு பட்டதாரி மாணவர், ஆங்கிலப் பேச்சைத் துவக்கவே அஞ்சுகிறார். இவருக்கு எந்தக் கம்பெனி வேலை கொடுக் கும்? இதற்குப் பரிகாரம் தமிழ் மீடியங்களில் பாடங்கள் தமிழிலேயே நடக்கட்டும். ஆனால், மாணவர்களின் அன்றாட உரையாடல்களை ஆங்கிலத்தில் பேச வைத்தால், அத்தனை ஆங்கில மீடியங்களும் 5,000 கி.மீ., பின்னோக்கி சென்று விடும்.அமெரிக்க அதிபர் ஒபாமா, பெங்களூரு கல்வி முறையை பாராட்டி யுள்ளார். சேர, சோழ, பாண்டியர்களை பள்ளிப்பாடங்களில் முன்னுரையாக வைத்து, கல்பனா சாவ்லாவையும், நெல்சன் மண்டேலாவையும், ஒசாமா பின்லாடனையும், "நாசா, இஸ்ரோ&'வையும் கருத்துரைகளாக வைத்தால், தமிழக மாணவர்கள் நல்ல முடிவுரை தருவர்.-சி.மல்லிகா சின்னகருத்த பாண்டியன், ராமநாதபுரம்.பாடத்திட்டத்தை மாற்றினால் போதாது: பாடத்திட்டங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் அல்லது அனைத்து பள்ளிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட பாடங்களில் அனைவரும் வல்லுனர் ஆக வேண்டும் என்று விரும்புகின்றனரா அல்லது எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், படிப்பதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று விரும்புகின்றனரா?எல்லாவற்றிக்கும் மேல் சமச்சீர் கல்வி என்பது வல்லுனர்களால் தீர்மானம் செய்து, அரசு முடிவு எடுத்து உள்ளதா அல்லது அரசு தீர்மானம் செய்ததை வல்லுனர்கள் செயல்படுத்த முயல்கின்றனரா? இவற்றிற்கு முழு விளக்கம் தேவை. புத்தகம், நோட்புக் சுமையை குறைக்க வேண்டும். தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. ஐந்து, எட்டாம் வகுப்பு முடிய, ஐந்து, எட்டு ஆண்டுகள் படிப்பு பூர்த்தி செய்து உள்ளார் என்ற சான்றிதழ் போதுமானது. தேர்வு தேவை இல்லை.வேலை கொடுப்பவர்கள் திறமையை சோதித்து தேர்ந்து எடுக்க வேண்டும். 15 வயதுக்கு மேல் தான், ஸ்பெஷல் இன்டலிஜென்ட் வளர்ச்சி அடைகிறது. சிந்திக்கும் பருவத்தில், மாணவர்கள் அவர்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெற்றோரின் நிர்பந்தமோ, அரசு நிர்பந்தமோ, இலாகா நிர்பந்தமோ கூடாது.சமச்சீர் கல்வி என்ற பெயரில் பாடத்திட்டத்தை மாற்றி முன்னேற்றம் அடைவோம் என்பது கானல் நீர். உண்மையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஒழுக்கநெறி கல்வி இன்றைய தேவை. டாக்டர் ஏ.எல்.முதலியார் இடைநிலைக் கல்வி அறிக்கை, டாக்டர் ஞானம் சமர்ப்பித்த அறிக்கை, டாக்டர் சிட்டிபாபு அறிக்கை (மெட்ரிக் குறித்து) நாம் எந்த அளவில் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை ஆய்வு செய்து அதில் விட்டுப் போனவற்றை நிறைவேற்ற செயல்பட வேண்டும்.-எம்.ஆர்.விஸ்வேஸ்வரன், மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு), தேனி.கீழ்த்தட்டுக்கு இனிக்கும் சர்க்கரை...: நகரில் அடுக்கு மாடி பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவனின் புத்தகமும், குக்கிராமத்தில் ஒழுகும் ஓட்டுக் கட்டடத்தில் படிக்கும் மாணவனின் புத்தகம், தேர்வுமுறை மட்டும் ஒரே மாதிரியாய் இருந்தால் சமச்சீர் கல்வியாகுமா? ஒன்றாம் வகுப்பிற்கு முன் உள்ள கல்விமுறையை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.அங்கன்வாடிகள் உயிர் பெற வேண்டும். பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கி, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்து, இங்கு வரும் குழந்தை, தரமானதாக இருந்தால் தான், முதல் வகுப்பு நன்றாக அமையும். அரசு, தனியார் பங்கெடுப்புடன் தொடக்கப்பள்ளி உள்ள இடங்களில், குறைந்த கட்டணக்கல்வியாக ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஆரம்பிக்கலாம்.அரைத்த மாவையே அரைக்கும் வரலாற்று பாடம், மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த, வரலாற்று இடம் சுற்றுலா, அருங்காட்சியகம், தொல்லியல்துறை தொடர்புடையதாக மாற்றப்பட வேண்டும். புவியியல் பாடமும் பயணம், ஆய்வு, புதிய சிந்தனையை நோக்கியதாக மாற்ற வேண்டும்.அறிவியல் பாடம், ஆய்வுக்கூடம் மற்றும் விஞ்ஞானிகள் வரலாறு, சூத்திரங்கள், உடற்கூறு இயல், வானியல் பாடங்களுக்கு பெரிய திரைவாயிலாக கற்றுக் கொடுப்பது அதிகரிக்க வேண்டும். இவ்வசதி அனைத்துப் பள்ளிக்கும் கிடைக்க வேண்டும். தமிழ், ஆங்கில மொழி ஆய்வுக்கூடம் தேவை.கணக்கியல், வணிகவியல், பொருளாதாரம் பாடங்கள், இன் றுள்ள மாநில, நாடு, உலகளாவிய சூழ்நிலையோடு பொருந்திப் போகும் விதத்திலும், வாழ்க் கைக்குப் பயன்படக் கூடிய விதத்திலும், தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற உந்துதலை கொடுக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.ஏற்றுமதி, இறக்குமதி, சுங்கம், கலால், வரிகள், அன்னியச் செலாவணி, பணத்தின் மதிப்பு உள்ளிட்டவைகளை சொல்லித் தரலாம். உனக்கும், எனக்கும் ஒரே புத்தகம் அவ்வளவு தான் என்று மட்டும் நின்றுவிடாமல், படிப்படியாக உள்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தல், உபகரணம் கொடுத்தல், கூடுதல் நிதி உதவிகள் செய்தல், கூடுதல் சலுகைகள், நிதி உதவிகள், மாணவர்களை சென்றடைய வேண்டும்.ஆசிரியர் தொடர்ந்து தொய் வின்றி உழைப்பு, நல்ல தலைமையும் அவசியம். தனியாருடன் ஒப் பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. சமச்சீர் கல்வி எனும் சர்க்கரை மேல்தட்டுக்கு இனிக்கும் சர்க்கரையாகவும், கீழ்தட்டுக்கு இனிக்காத சர்க்கரையாகவும் இருந்துவிடக் கூடாது.-சோ.ராமு, ஆசிரியர், திண்டுக்கல்.சித்திரம் எழுத சுவர் தேவை: சுவர் இருந்தால் தான் சித்திரம்  வரைய முடியும் என்பதற்கேற்ப, நன்கு தேர்ந்த ஆசிரியர்கள் மூலமே, எதையும் சாதிக்க முடியும். மாணவ - மாணவியரின் செயல் திறமைகளை வெளிக்கொணரும்படி, கல்வி சீரமைப்பு அமைய வேண்டும். ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது, அரசு, அரசியல் குறுக்கீடுகள் கூடாது. அந்தந்த பாடத்திட்டங்களை விருப்பு வெறுப்பின்றி, அந்தத் துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் குழுவின் மூலம், கோட்டா முறை இல்லாமல், திறமையை அளவுகோலாக கொண்டு, ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.சிக்கனம், ஒழுக்கம், கிராம மேம்பாடு, இயற்கையோடு இணைந்த சுகாதாரம், விவசாயம், மண்வளம் குன்றாத பொருளாதார மேம்பாடு பற்றிய விளக்கங்கள், காடுகளின் முக்கியத்துவம், வக்ர சிந்தனைகளே இல்லாத அறிவியல், விஞ்ஞானம் போன்ற துறைகள் இடம்பெறுவது அவசியம்.இவை மிகப்பெரிய விஷயமாக இருந்தாலும், சிறந்த அடித்தளம். திறமையான ஆசிரியர் தேர்ந்தெடுப்பு மூலம், இவையெல்லாம் மிகவும் சுலபமே. சரியான, பலமான, யோக்கியமான, ஒழுக்கமான அடித்தளம் அமைந்தால், சமச்சீர் கல்வி முறையை திறம்பட செயல்படுத்தலாம்.-ஆர்.கண்ணன், சென்னை.சிந்தனையைத் தூண்டுவதே கல்வி: சிந்தனையை தூண்டுவதே சிறந்த கல்வி. அறிவியல் பாடங்களுக்கு மாணவர்களிடம் பாடநூல் வழங்குவதை தவிர்க்க வேண்டும். தெளிந்த ஆசிரியர்கள், தகுந்த உபகரணங்களை கொண்டு, வகுப்பில் பாடம் நடத்தியபின், அவரே அதிலிருந்து சில கேள்விகளை கேட்டு மாணவர்களை விடையளிக்க செய்ய வேண்டும்.சுற்றுபுறவியல் பாடத்தை கட்டாயமாக, அனைத்து வகுப்புகளுக்கும் கற்பிக்க வேண்டும். காலநிலை மாற்றம், உலகம் வெப்ப மயமாதல் விளைவுகளிலிருந்து வருங்கால உலகைக் காப்பாற்ற சிறந்த வழி இது. முழுமையான ஒரு கல்வியைத் தராமல், பாடங்களின் எண்ணிக்கையை மட்டும் கூட்டி குறைத்து அச்சிட்டு வழங்குவதால், வேலை பெற்று தரும் கருவியாக மட்டுமே இருக்குமேயன்றி, சிறந்த மனிதனை உருவாக்காது.-நம.தேவேந்திரன், கடலூர்.வழிகாட்டும் கல்வி தேவை: இன்றைய சூழ்நிலையை நமது கல்வி பாடத்திட்டத்தில், அசோகர் - குளம் வெட்டினார், கண்ணகி - மதுரை எரித்தாள், வெளிநாடுகளில் இவ்வளவு மழை, கனிமம், வளம் உள்ளது என்பதற்கு பதிலாக, நமது பாடத்திட்டத்தை ஒன்றாம் வகுப்பு முதல் மாற்றி அமைத்தல் வேண்டும். ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் உணவு முறை, விட்டுக் கொடுக்கும் பண்பு, தலைமை பண்பு, பிறருக்கு உதவுதல், நாட்டின் வளம் காக்கும் வழிகள், இயற்கையுடன் ஒத்து வாழ்தல், இயற்கை சீற்றத்தை தடுக்கும் வழிகள், விலங்கு - தாவரம் பாதுகாக்கும் முறை, விவசாயம், அதை சார்ந்த தொழிலுக்கு முதலிடம், எல்லாவற்றிலும் முக்கியமானது, அந்நிலையிலும் தோல்வி கண்டு துவளாது எதிர்த்து நின்று ஜெயிக்கும் குணம் ஆகியவை போதிக்க வேண்டும்.-நி.ஸ்ரீவித்யா சங்கரி, தலைமை ஆசிரியை, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்