படித்த பல்கலையில் கேன்டீன் நடத்தும் பிஎச்.டி., மாணவர்
பீகார் மாநிலம், ஷேக்புரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷெசாத் இப்ராகிம் (37). நாலந்தாவில் உள்ள மதரசா பள்ளியில் படிக்கும் போதே, சமையல் செய்ய கற்றுக்கொண்டார். உருது பாடத்தை பிரதானமாக எடுத்து படித்தார். பாட்னா கல்லூரியில் எம்.பில்., முடித்த பின் ஐதராபாத்தில் உள்ள உருது "டிவி&'யில் செய்தி வாசிப்பாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.பின்னர், வாரணாசிக்கு பணிமாற்றம் செய்யப் பட்டதும், இந்த பணியை உதறினார். இதற்கிடையே, அவர் மோனா குப்தா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை வளாகத்தில் ஒரு கேன்டீன் அமைக்க கோரினார். இதற்கு அனுமதி கிடைத்ததும், குடும்பத்தோடு சேர்ந்து இந்த தொழிலை செய்தார். 2002ம் ஆண்டு இதே பல்கலைக் கழகத்தில் அவர் பி.எச்டி., படிப்பையும் தொடர்ந்தார்.இதன் மூலம், அவருக்கு மாணவ நண்பர்கள் பெருகினர். கேன்டீனிலும் கூட்டம் அலை மோதியது. 25 ரூபாய் அடக்கவிலையில் விதவிதமாக சமையல் செய்து வாடிக்கையாளர்களை திருப்தி செய்தார். ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேர் இவரது கேன்டீனில் சாப்பிட்டு வருகின்றனர். அதிகபட்சம் 180 பேர் வரை வருவார்களாம்.இவர் தயாரிக்கும் கோழி கறி குருமா ருசியாக இருக்கும் என்பதால் பலர் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். எதிர்காலத்தில் பெரிய ஓட்டலை நடத்த வேண்டும், என்பது தான் இப்ராகிமின் கனவாம்.