விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி பணிகள் துரிதம்?
கடந்தாண்டு விழுப்புரம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் அரசு பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் துவங்கப்பட்டன. விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி தற்காலிகமாக திரு.வி.க., வீதியிலுள்ள பழைய தாலுகா அலுவலக கட்டடத்தில் வகுப்புகள் துவங்க ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 8ம் தேதி பொறியியல் கல்லூரி வகுப்புகள் துவங்கி நடந்து வருகின்றன. மாணவர்களுக்காக 4 வகுப்பறைகள், 5 ஆய்வகம், ஒர்க் ஷாப் ஷெட் அமைத்து தரப்பட்டுள்ளது. தற்காலிகமாக இரு பாலருக்கும் தனி தனி விடுதி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இரண்டாமாண்டு மாணவர்களுக்கு விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோட்டிலுள்ள பழைய டி.ஐ.ஜி., அலுவலக கட்டடத்திலும், மாணவிகளுக்கு டேனிடா கட்டடத்திலும், முதலாமாண்டு மாணவர்கள் எம்.ஜி.ஆர்., கெஸ்ட்ஹவுஸ் கட்டடத்திலும், மாணவிகள் நகராட்சி பூங்கா அருகே உள்ள வி.வி.ஏ., கட்டடத்திலும் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பாடங்கள்: இக்கல்லூரியில் மெக்கானிக்கல், இ.சி.இ., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஐ.டி., ஆகிய 4 பாட பிரிவுகளுடன் வகுப்புகள் நடந்து வருகின்றன. ஒரு பாட பிரிவுக்கு 60 மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட முதலாமாண்டில் 240 மாணவர்களில் 225 பேர் மட்டுமே சேர்ந்தனர். கடந்த செப்டம்பர் 7 ம் தேதி துவங்கிய இரண்டாமாண்டு வகுப்புக்கு 240 பேரில் 220 பேர் மட்டுமே சேர்ந்தனர். தேர்ச்சி: மாணவர்களின் சீரிய முயற்சி மற்றும் பேராசிரியர்களால் கடந்தாண்டு தேர்ச்சி விழுக்காட்டில் பின்தங்கியிருந்த மாவட்ட மாணவர்கள், இந்தாண்டு மாநில 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. வரும் கல்வி ஆண்டில் முதல் 4 இடங்களுக்குள் தேர்ச்சி பெற மாணவர்கள், பேராசிரியர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வகுப்புகள் துவங்கி குறிகிய காலத்திற்குள் தேர்ச்சி விழுக்காட்டில் முன்னேற்றம் கண்டுள்ள விழுப்புரம் அரசு பொறியியல் கல் லூரிக்கு அண்ணா பல் கலை கழக துணை வேந் தர் மன்னர்ஜவகர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்காக தற்பொழுது உள்ள வேனுடன் மற்றொரு பஸ் வசதி செய்து தருமாறு பல்கலை கழக நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம்: விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி தனி அலுவலர் டாக்டர் ராஜமாணிக்கம் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க 18 பேராசிரியர்கள், 7 தற்காலிக பேராசிரியர்கள், 12 அலுவலர்கள், 2 தற்காலிக அலுவலர்கள், 10 தின கூலி தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இக்கல்லூரியில் முதல்வர் நிதியில் இருந்து அருந்ததியர் மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை 6 மாணவர்களுக்கு பெற்று தரப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் சார்பில் வங்கி கணக்கு துவக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்லூரி அருகே வங்கி துவக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கட்டடம்: அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான நிரந்தர வகுப்பறை மற்றும் விடுதி கட்டடம் விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப் படை மைதானத்திற்கு எதிரே வேளாண்மை துறைக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அடிக்கல்: காக்குப்பத்தில் 17.5 ஏக்கர் பரப்பளவில் கடந்த மாதம் 17 ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் அரசு பொறியியல் கல்லூரி வகுப்பறை மற்றும் விடுதி கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினார். இக்கட்டுமான பணிகளுக்காக 2 ஆயிரத்து 628 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நாமக்கல்லை சேர்ந்த பி.கே.எஸ். கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தால் பணிகள் நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 24 வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகம் ஆகிய கட்டடப் பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி கட்டடப் பணிகள் முடிக்க துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துரிதம்: தற்காலிக கட்டடத்தில் இயங்கி வரும் கல்லூரி மழை காலங்களில் ஒழுகுவதால் மாணவர்கள் படிக்க இயலாத நிலை ஏற்பட்டு பெரும் அவதியடைந்து வருகின்றனர். இடநெருக்கடி காரணமாக அலுவலகங்கள், வகுப்புகள் போதிய வசதியின்றி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பயின்றுவரும் மாணவர்களுக்கு இடவசதியில்லாத நிலையில் வரும் கல்வியாண்டில் புதியதாக சேரும் மாணவர்களுக்கான வகுப்பறை கட்டடம், விடுதி வசதிகளும் தயாராகவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு கல்லூரி கட்டுமான பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. பி.கே.எஸ். நிறுவனம் விழுப்புரம் அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளுடன் விழுப்புரம், திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி கட்டுமான பணிகளையும் ஒரே நேரத்தில் செய்து வருகிறது. புதிய வகுப்புகள்: தற்காலிக கட்டடத்தில் இயங்கி வரும் கல்லூரியில் மெக்கானிக்கல், இ.சி.இ., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஐ.டி., ஆகிய 4 பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. ஆனால் தற்பொழுது கட்டடப்பட்டு வரும் கல்லூரி கட்டுமான பணிகள் நிறைவடைந்தால், கூடுதல் பாடங்கள் சேர்க்கப்படவுள்ளன. கட்டடப் பணிகள் முடிந்தவுடன் சிவில், எலக்ட்ரானிக் ஆகிய பாடங்கள் துவக்கப்பட உள்ளது.