அரசு கல்லுாரி மாணவர்களுக்கு சீருடை: பெற்றோர் கோரிக்கை
சென்னை: பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரி 2016ல் துவங்கப்பட்டது. தென் சென்னையில் உள்ள அரசு கல்லுாரியாக இருப்பதால், ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைகின்றனர்.இங்கு, தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணித பயன்பாட்டியல், இயற்பியல், வேதியியல் போன்ற இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. முதுநிலை பாடப்பிரிவுகள் துவங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வீட்டில் இருந்து புறப்படும் சில மாணவர்கள், கல்லுாரிக்கு செல்லாமல், மால், திரையரங்கு, கடற்கரை என, ஊர் சுற்றுவதாக புகார் எழுந்துள்ளது. சில மாணவியரும் கல்லுாரியை கட் அடித்து சுற்றுகின்றனர். எனவே, கல்லுாரியில், ஆப்சென்ட் ஆவதை தடுக்க பள்ளி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புக்கு சீருடை இருப்பது போல், கல்லுாரியிலும் சீருடை நடைமுறை கொண்டுவர வேண்டும் என பெற்றோர், கல்லுாரி நிர்வாகத்திற்கு கோரிக்கைவைத்துள்ளனர்.பெற்றோர் கூறியதாவது:ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ - மாணவியர் தான், அரசு கல்லுாரியில் படிக்கின்றனர். படிப்பறிவு இல்லாதது, வேலைக்கு செல்வது என எங்கள் சூழல் உள்ளதால், பிள்ளைகள் கல்லுாரிக்கு சென்றனரா என, தீவிரமாக கண்காணிக்க முடியவில்லை. கல்லுாரி சென்று கேட்கும்போது தான், அவர்கள் வெளியே சுற்றுவது உட்பட பல உண்மைகள் தெரியவருகின்றன.சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர், பிள்ளைகளை மூளைச்சலவை செய்து தவறான வழிக்கு கூட்டிச் செல்ல வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்லுாரி செல்வதை உறுதி செய்ய, மாணவர்கள் சீருடை அணிந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்லுாரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்.கல்லுாரி நிர்வாகத்திடம் கேட்டபோது, சில மாவட்டங்களில் உள்ள கலைக்கல்லுாரியில் சீருடை அணிய வேண்டும் என விதிமுறை உள்ளது. இங்கும், அதுபோன்று கொண்டுவர பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர். மேல் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றனர்.