உள்ளூர் செய்திகள்

பொது பாடத்திட்டம்: அவசர கதியில் அறிமுகமாவது ஏன்?

அவசர கதியில் உருவாக்கப்பட்டு அவசர கதியில் திணிக்கப்படும் பொது பாடத்திட்டத்தால், தமிழகத்தில்உயர் கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்ற கருத்து வலுத்துள்ளது. சமச்சீர் கல்வி அறிமுகத்திற்கு பின் பள்ளி கல்வியில் நடந்தது போன்று, உயர் கல்வியிலும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உயர் கல்வி மன்றம்ராஜிவ் காந்தி ஆட்சி காலத்தில் புதிய கல்வி கொள்கை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதை இங்கு செயல்படுத்துவதற்காக உயர் கல்வி மன்றம் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த பணி சரிவர செய்யப்படவில்லை. அண்மை காலங்களில், மத்திய அரசின் ராஷ்ட்ரிய உச்சதர் ஸிக் ஷா அபியான் திட்டத்தில் இருந்து வரும் நிதியை பயன்படுத்தி, உயர் கல்வி ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பயிற்சி அளிப்பது மட்டுமே, இந்த மன்றத்தின் பணியாக இருந்தது. இந்த மன்றத்திற்கு வேறு ஒரு பணியும் கிடையாது.இதன் தலைவர் உயர் கல்வி அமைச்சர், துணை தலைவர், உறுப்பினர் செயலர்களாக அரசுக்கு வேண்டப்பட்ட ஒரு சில ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் என, செலவு எழுத ஒரு இடமாக மட்டுமே இந்த மன்றம் செயல்பட்டுவந்தது. கடந்த 2016க்கு பின் இந்த மன்றம் கூட்டப்படவே இல்லை. 2021-ன் இறுதியில் மறு கட்டமைக்கப்பட்டு, ஓராண்டிலேயே பொது பாடத்திட்டத்திற்கான 301 மாதிரி பாடங்களை, இந்த மன்றம் உருவாக்கி உள்ளது என்பது உயர் கல்வி துறையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.அவசர கதிஅனைத்து பாடப் பிரிவுகளுக்கும் எப்படி ஓராண்டுக்குள் மாதிரி பாடங்களை உருவாக்க முடியும்? இதில் போதுமான அளவு வல்லுனர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதா; தொழில் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனரா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. பதிலாக, பாடத்திட்ட தயாரிப்பில் முன்னிலை கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் ஆலோசனைகளோடு, 922 பேராசிரியர்கள் 870 கூட்டங்கள் நடத்தி, பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளதாக, நேற்று முன்தினம் உயர் கல்வி துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.ஆனால், பெரும்பாலான பேராசிரியர்கள் இவ்வாறு கூட்டங்கள் நடந்ததாக, தங்களுக்கு தகவலே தெரியாது என்கின்றனர். பல்கலைகள் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. ஒரு முறை மட்டும் உயர் கல்வி மன்றத்தில், அமைச்சர் பொன்முடி தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதிலும், துணை வேந்தர்களிடம் கருத்து பெறவில்லை; தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டது என்கின்றனர்.மேலும், பல்கலைகள் அங்கீகரித்த பாடத்திட்ட குழுக்களில் வைத்து அனுமதி பெறவில்லை. பாடத்திட்டத்தை தயாரித்த வல்லுனர்கள்; எந்த கல்லுாரி, பல்கலைகளை சேர்ந்தவர்கள்; அவர்களின் கல்வி தகுதி மற்றும் அனுபவம் போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை என்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் 2019-20ல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படாமல் இருந்த ஒரு மாதிரி பாடத்திட்டத்தை தான், சற்று மாற்றங்கள் செய்து, பொது பாடத்திட்டம் என்று உயர் கல்வி மன்றம் வெளியிட்டு உள்ளதாக சந்தேகம் எழுப்புகின்றனர்.மேலும், மின்னணு பாடங்களுக்கு, மத்திய அரசின், nptel.ac.in என்ற இணையம் குறிப்பிடப்பட்டுள்ளது. சில பாடங்களுக்கு மத்திய அரசின் இ - பாடசாலை, இக்னோ பல்கலை போன்றவற்றின் இணைய முகவரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டம், மத்திய அரசின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து, எடுக்கப்பட்ட கலவையாக உள்ளது. புதிய பாடத்திட்டங்களை உருவாக்க கணிசமான நேரம் தேவைப்படும் என்பதற்கு, புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டதை, கல்வியாளர்கள் உதாரணமாக காட்டுகின்றனர். கடந்த 2015ல் துவங்கிய தேசிய கல்வி கொள்கையின் பணி, 2020ல் தான் முடிந்தது.அதில், இரண்டு லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அது கொள்கை, இது பாடத்திட்டம் என்று கருதினாலும், ஓராண்டுக்குள் 301 பாடத்திட்டங்களை செம்மையாக உருவாக்குவது சாத்தியமில்லை என்பதே பரவலான கருத்தாக உள்ளது.அரசியல் காரணம்இப்போது அவசர கதியில், பொது பாடத்திட்டம் திணிக்கப்படுவதற்கான காரணம், அரசியல் தான் என்று கூறப்படுகிறது. கடந்த 2020ல் வெளியான தேசிய கல்வி கொள்கையை, பல்கலைகள் படிப்படியாக அமல்படுத்த துவங்கிவிட்டன. கவர்னர் ரவி, பல்கலைகளுக்கு வேந்தராக பொறுப்பேற்ற பின், இது இன்னும் வேகம் பிடித்துள்ளது. தேசிய கல்வி கொள்கையை சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் தி.மு.க., அதை முறியடிக்கவே பொது பாடத் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.கவர்னர் ரவியுடனான மோதலில், வேந்தராக கவர்னர் வேண்டாம் என்ற சட்டம் நிறைவேறாத நிலையில் உள்ளது. வேறு எப்படியாவது, பல்கலைகளை, மேலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கமும் இதில் மேலோங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு முக்கிய காரணமாக தெரிந்தாலும், இதன் பின்னணியில் பெரிய சதி வேலை நடக்கிறது என்றும் சில கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.சதியா?பொது பாடத்திட்டத்திற்கான டெக்ஸ்ட்புக் எதுவும் இதுவரை தயாரிக்கப்படவில்லை. மாறாக, வழிகாட்டி புத்தகங்கள், ரெபரன்ஸ் புத்தகங்களாக, அதிக விலையுடைய &'டாடா மெக்ராஹில், மேக் மிலன் மற்றும் புது டில்லி மற்றும் நியூயார்க்கில் உள்ள சில தனியார் நிறுவனங்களின் தயாரிப்புகள் தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதனால், இதில், தனியார் புத்தக நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்திருக்குமோ என்ற சந்தேகம் முன்வைக்கப்படுகிறது.தனியார் பல்கலைகளை அனுமதிக்கும் சட்டம், தமிழகத்தில் கடந்த 2019ல் கொண்டுவரப்பட்டது. இவை கணிசமான அளவில் வர வேண்டுமென்றால், அரசு பல்கலைகள் பலவீனமாக வேண்டும். சமச்சீர் கல்வி அறிமுகத்திற்கு பின் மெட்ரிக் பள்ளிகள், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., மட்டுமல்லாது, ஐ.ஜி., - ஐ.பி., போன்ற வெளிநாட்டு பாடத்திட்டங்களுக்கும் மாறியதோ, அதே போன்ற நிலை, உயர் கல்வியில் உருவாகலாம். தரத்திற்காக, தனியார் பல்கலைகளையும் தன்னாட்சி கல்லுாரிகளையும் நோக்கி மாணவர்கள் நகர்வர். ஒரு காலகட்டத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கும், தற்போது தனியார் சட்ட கல்லுாரிகளுக்கும் அனுமதி வழங்கி அரசியல்வாதிகள் சம்பாதித்தது போல், இதிலும் சம்பாத்தியம் பார்க்கலாம் என்ற திட்டம்இருக்குமோ என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.பிற சந்தேகங்கள்பேராசிரியர்கள் முன்வைக்கும் பிற சந்தேகங்கள்:பொது பாடத்திட்ட அம்சங்கள் பரீட்சார்த்த முறையில், சில கல்லுாரிகளில் மட்டும் அமல்படுத்தி, அதன் நிறை, குறைகளை ஆய்வு செய்யாமல், அனைத்து கல்லுாரிகளிலும், ஒரே நேரத்தில் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையோ, மாநில கல்வி கொள்கையோ, விரைவில் முழுமையாக அமலானால், அவசர கதியில் வந்த இந்த பாடத்திட்டத்தை மீண்டும் தொடர முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் வழியாக, ஆறு ஆண்டுகளுக்கு பின் செயல்பாட்டுக்கு வந்துள்ள உயர் கல்வி மன்றத்தால், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை புதுப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., என்ற பல்கலை மானியக் குழு வழங்கியுள்ள தன்னாட்சி அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.பல்வேறு பல்கலைகளின் பாட திட்டங்கள் இடையே 75 சதவீதம் சமநிலை இருக்க வேண்டும் என்பதற்காக பொது பாடத்திட்டம் உருவாக்கியுள்ளதாக அரசு கூறுகிறது.இப்போது பல்கலைகளில் கடைப்பிடிக்கப்படும் பாடத் திட்டங்கள் சிண்டிகேட் குழுவின் ஒப்புதலுடன் தான் வெளியாகின்றன. சிண்டிகேட்டில் அரசின் செயலர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அரசின் ஒப்புதலோடு தானே பாட திட்டங்கள் வந்துள்ளன.அப்படியென்றால், இவ்வளவு காலம் அரசு எடுத்த முடிவு தவறா? இதில் பாடத்திட்ட சமநிலை தேவை என்றால், சிண்டிகேட் வழியாகவே சமநிலை இல்லாத இடங்களை திருத்தச் செய்திருக்கலாமே என, கல்வியாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.சுதந்திரம் தேவைபல்கலைகளுக்கு ஒரே பாடத்திட்டம் என்ற நடைமுறை, கலை படிப்புகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால், இன்ஜினியரிங் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு உகந்ததாக இருக்காது.கல்லுாரிகள் தங்கள் தன்னாட்சி அதிகாரங்கள் வழியாக, தங்கள் பகுதிக்கும், தங்களுடன் இணைந்து செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கும் உகந்த, வேலைவாய்ப்புக் கேற்ற பாடத்திட்டங்களை உருவாக்குவது வழக்கம்எனவே, அந்தந்த பகுதி தொழில் நிறுவனங்களுடன் கலந்து பேசி, அவர்களுக்கு தேவையான அம்சங்களை கருத்தில் வைத்து, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். பொது பாடத்திட்டம் வந்தால், இந்த நடைமுறையில் சிக்கல் ஏற்படும். அடிப்படையான சில பாடங்களுக்கு மட்டும், பொது பாடத்திட்டம் அமல்படுத்தலாம். மற்ற அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் விருப்பப்படி விடுவதே சிறந்தது.- ஜெயப்பிரகாஷ் காந்திஉயர் கல்வி ஆலோசகர்கூட்டணி கட்சி கூட எதிர்க்கிறது!ஆளும் தி.மு.க., கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், எஸ்.எப்.ஐ., என்ற இந்திய மாணவர் சங்க மாநில செயலர் நிருபன் அறிக்கை:தமிழகத்தில் தான் அதிக தன்னாட்சி கல்லுாரிகள் உள்ளன. அவை புதுமையான, தரமான பாடத்திட்டங்களை உருவாக்கி, கல்வி பேரவை வழியாக ஒப்புதல் பெற்று நடத்தப்படுகின்றன. இந்த சுதந்திரத்தை முடக்கும் வகையில், தமிழக அரசு பொது பாடத்திட்டம் கொண்டு வருவது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.எதிர்காலம் கேள்விக்குறியாகும்மத்திய அரசின் பொதுப் பட்டியலில் கல்வி உள்ள நிலையில், யு.ஜி.சி., போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதல்படி, உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். தேசிய தர மதிப்பீட்டுக்கான நாக் குழுவின் விதிமுறைப்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, கல்லுாரிகள் குறைந்த பட்சம் 30 சதவீத பாடத்திட்டங்களை தரம் உயர்த்த வேண்டும்.ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும் தனித்தனியே தான் மதிப்பிட முடியும். இப்படி இருக்க, பாடத்திட்டங்கள் அனைத்தும் பொதுவாக இருந்தால், உயர் கல்வி நிறுவனங்கள், தேசிய தர மதிப்பீட்டில், உயர் மதிப்பெண்களை பெறுவதிலும், ஆராய்ச்சி நிதி பெறுவதிலும் சிக்கல் ஏற்படும்.எனவே, உயர் கல்வியில் தொடர்ந்து குழப்பம் விளைவிப்பதை தவிர்த்து, பல்கலைகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்கும் எண்ணத்தை, உள்நோக்கத்தை, மலிவான அரசியலை, தி.மு.க., அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், தமிழக மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து, அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு எதிர்காலம் கேள்விக்குறியாகும் என பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறினார்.ஆதரிக்கிறோம்!பொது பாடத்திட்டம் வந்தால், ஒரு கல்லுாரி அல்லது பல்கலையில் படிக்கும் மாணவர், அதை இடையிலேயே விட நேர்ந்தால், வேறு கல்லுாரி, பல்கலையில் தொடரலாம். கல்லுாரிகள் நடத்தும் பட்டப் படிப்புகள், அரசு வேலைக்கு தகுதியானதா என, உயர் கல்வி மன்றத்தை நாடி, சான்றிதழ் பெறும் அலைச்சல் குறையும். உயர் கல்வி மன்றமே அனுமதிக்கும் பாடத்திட்டம் நடத்துவதால், அரசு வேலைக்கு தகுதியானதாகி விடும். தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்பது சிறந்த நடவடிக்கை- பேராசிரியர் சரவணன் மாநில பொதுச் செயலர், தமிழ்நாடு பல்கலை ஆசிரியர்கள் சங்கம்.- நமது நிருபர் -தி.மு.க., பாடத்திட்டம்மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் சார்பில், பேராசிரியர்கள் சிவகுமார், அரசு, சிவராமன் ஆகியோர் கூறியதாவது:உயர் கல்வி மன்றத்தில், தி.மு.க.,வினர் தான் உறுப்பினர்களாக உள்ளனர். அரசு தயாரித்துள்ள பாடத்திட்டத்தில், மறைந்த கருணாநிதி எழுதிய நாவல், தமிழ் இலக்கிய பாடத்தில் இடம் பெற்றுள்ளது. பாடத்திட்ட தயாரிப்பு மற்றும் வரைவு அறிக்கை குறித்து, பேராசிரியர்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். அந்த நடைமுறையும் மேற்கொள்ளப்படவில்லை. எல்லா பல்கலைக்கும் ஒரே பாடத்திட்டம் அமலாகும் என்றால், அனைத்து துணை வேந்தர்களையும் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது தேவையற்ற வேலைஆலோசனை அமைப்பாக உருவாக்கப்பட்ட உயர் கல்வி கவுன்சிலுக்கு, இது தேவையற்ற வேலை. சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தன்னாட்சி அந்தஸ்துடன், தனித்தனி பாடத்திட்டங்களை தயாரிக்கின்றன. இதனால், புதிய படிப்புகளை கற்ற பட்டதாரிகள் உருவாவர்; புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகும். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்து பல்கலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற நடவடிக்கை, தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை குறைக்கும் செயல். ஒரே பாடத்திட்டம் என்றால், இத்தனை பல்கலைகள், துணை வேந்தர்கள், தனித்தனி நிர்வாகங்கள் எதற்கு?அனைத்தையும் மூடி விட்டு, ஒரே பல்கலையை மாநிலம் முழுதும் நடத்தி விடலாம். யு.ஜி.சி., வழங்கியுள்ள தன்னாட்சி அதிகாரத்திலும், தமிழக அரசு தலையிடுவதாக உள்ளது. பாடத்திட்ட நிபுணர்கள் அடங்கிய போர்டு ஆப் ஸ்டடீஸ் என்ற கல்வி குழுக்களின் அங்கீகாரம், கருத்துகளை பெறாமல், பல்கலைகளின் பாடத்திட்டம் அமல்படுத்த முடியாது.அதற்கு பல்கலைகளின் சட்டத்திலும் இடம் இல்லை.எனவே, தமிழக அரசின் இந்த நடவடிக்கை, பல்கலைகளில் உள்ள சிண்டிகேட், செனட், அகடமிக் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரங்களை பறித்து, பல்கலையை அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியாக தெரிகிறது என அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கூறினார்.கைவிடுங்கள்!பொது பாடத்திட்டத்தால், தமிழக உயர் கல்வியின் தரம் குறையும். யு.ஜி.சி., சார்பில், உயர் கல்வி நிறுவனங்களுக்கு, 45 ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி அந்தஸ்தை இழக்க செய்யும்.எம்.நாகராஜன்ஒருங்கிணைப்பாளர்,கல்லுாரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்