உள்ளூர் செய்திகள்

இரண்டு பல்கலைகழகங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க எதிர்ப்பு

புதுடில்லி: மத்திய அரசின், இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் எனப்படும், சீர்மிகு உயர்கல்வி நிறுவனங்கள் என்ற சிறப்பு அந்தஸ்தை, ஜாதவ்பூர் மற்றும் ஜாமியா ஹம்தர்த் பல்கலைகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.சீர்மிகு உயர்கல்வி நிறுவனங்கள் திட்டத்தை மத்திய அரசு 2018ல் அறிவித்தது. இதன்படி, 10 அரசு பல்கலைகள், 10 தனியார் பல்கலைகளுக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்படும். இந்த அந்தஸ்து பெறும் கல்வி நிறுவனங்கள் கல்வி மற்றும் நிர்வாக தன்னாட்சியைப் பெறும். இதன் வாயிலாக வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்ய முடியும். சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில், அரசு கல்வி நிறுவனங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும். தனியார் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படாது. முதல் கட்டமாக, 2018ல், புதுடில்லி ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், மும்பை ஐ.ஐ.டி., பெங்களூரைச் சேர்ந்த இந்திய அறிவியல் மையம் ஆகிய அரசு நிறுவனங்களுக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, 2019ல் புதுடில்லி பல்கலை, பனாரஸ் ஹிந்து பல்கலை, ஹைதராபாத் பல்கலை, சென்னை ஐ.ஐ.டி., கரக்பூர் ஐ.ஐ.டி., ஆகியவற்றுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதற்கிடையில், சில அரசு மற்றும் தனியார் பல்கலைகளுக்கான அந்தஸ்து தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அது தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு மற்றும் மத்திய அரசின் அதிகாரமுள்ள நிபுணர் குழு ஆகியவற்றின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இந்தக் குழுக்கள், மத்திய கல்வி அமைச்சகத்துக்கு தன் பரிந்துரைகளை அனுப்பியுள்ளன.அவற்றில் கூறப்பட்டு உள்ளதாவது:சென்னை அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான விண்ணப்பத்தை தமிழக அரசு திரும்பப் பெற்று விட்டது. ஜாதவ்பூர் பல்கலைக்கான சீரமைப்புக்கு முதலில், 3,299 கோடி ரூபாய் மதிப்பீடு வழங்கப்பட்டிருந்தது. இதில் மாநில அரசும், தன் பங்களிப்பை அளிக்க வேண்டும். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுகளைத் தொடர்ந்து, அதை, 1,015 கோடி ரூபாயாகவும், கடைசியில், 606 கோடி ரூபாயாகவும் குறைத்து, மேற்கு வங்க அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தளவுக்கு மிகவும் குறைவான மதிப்பீடு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளதால், இந்தப் பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதை நிறுத்தி வைக்கலாம். புதுடில்லியில் உள்ள ஜாமியா ஹம்தர்த் பல்கலைக்கழகம் நிர்வாகத்தில் உள்ள குடும்பத்தினர் இடையே, சொத்து தொடர்பாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அது ஐந்தாக பிரிந்துள்ளது. இதனால், இந்தப் பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த அமிர்தா வித்யாபீடம், வேலுார் தொழில்நுட்ப மையம், ஒடிசாவின் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம், பஞ்சாபைச் சேர்ந்த பாரதி மையம் ஆகியவை, சிறப்பு அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்