நர்சிங், பி.பார்ம்., சேர்க்கை இன்று முதல் கலந்தாய்வு
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 19 வகையான மருத்துவம் சார்ந்த துணை பட்டப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,000; தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 14,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இந்த இடங்களுக்கு, 66,696 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு, ஆன்லைனில் இன்று துவங்குகிறது.இதுகுறித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளோர், இன்று காலை, 10:00 மணி முதல், 18ம் தேதி மாலை, 5:00 மணி வரை www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற சுகாதாரத் துறை இணையதளங்களில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்யலாம். வரும், 21ம் தேதி இடங்கள் ஒதுக்கப்படும். இட ஒதுக்கீட்டு ஆணையை, 22ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம்; 28ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.