வெற்றியில் தமிழர்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் கூடுதல் பங்கு!
பெங்களூரு: இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார். சந்திரயான் - 2 திட்ட இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோரும் தமிழர்கள்.இஸ்ரோவின் வெற்றிக்கு தமிழர்கள் பங்காற்றியது மட்டுமின்றி, தமிழ் மண்ணும் பங்களிப்பை அளித்துள்ளது. சந்திரயான் திட்ட பணிகளுக்காக, நிலவின் தென் துருவத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ற மண்ணை பூமியில் கண்டறிந்து, அதில் சோதனை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். நிலவில், அனார்தோசைட் எனப்படும் பாறை அளவுக்கு உறுதியான மணல் பரப்பு காணப்படுகிறது. இந்த தன்மை உடைய மண் நாமக்கல் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. குறிப்பாக, நாமக்கல்லின் சித்தம்பூண்டி, குன்னாமலை கிராமங்களில் இருந்து 50 டன்னுக்கும் அதிகமாக மண் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதில் ரோவரை தரையிறக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சோதனை மேற்கொண்டனர். எனவே, சந்திரயான் - 3 திட்டத்தின்இந்த வெற்றியில் தமிழர்களுக்கும், தமிழ்மண்ணுக்கும் கூடுதல் பங்கு உள்ளது.