இணை பேராசிரியர் பதவி உயர்வில் முறைகேடு சர்ச்சை
கோவை: அரசு பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரிகளில் கடந்த ஏப்., மாதம் வழங்கப்பட்ட இணை பேராசிரியர் பதவி உயர்வில், முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 10 அரசு பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகள் உள்ளன. கடந்த ஏப்., மாதம் இக்கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களாக இருந்தவர்களில், தகுதியான 145 பேருக்கு இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில், ஐந்து பேருக்கு உரிய தகுதிகள் இன்றி வழங்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இணை பேராசிரியர் பதவி உயர்வு பெறுவதற்கு, பி.எச்டி., முடித்து இருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.ஆனால், 5 பேருக்கு உரிய கல்வித்தகுதியின்றியும், அவர்களின் இணை சான்றிதழ்களை ஆய்வு செய்யாமலும், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது, சக பேராசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்திலும் புகாரை பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், உதவிபேராசிரியர்கள், 145 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், ஐந்து பேரின் தகுதி கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால், பதவி உயர்வு பெற்ற எங்களின், ஊதிய மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு வழங்கும் முன் சிறப்பு குழு அமைத்து, விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான நபர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்க வேண்டியது அவசியம். ஆனால், எவ்வித ஆய்வும் மேற்கொள்ளவில்லை.முதல்வர் பரிந்துரையின் பேரில் வழங்கினோம் என்ற அலட்சியமான பதிலை, உதவி இயக்குனர்கள் வழங்குகின்றனர். உடனடியாக தகுதியின்றி பதவி உயர்வு பெற்றவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்வதுடன், பிறரின் ஊதிய மாற்றத்தின்படி, முழுமையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.