உயர்மட்ட பாலம் திறந்த பள்ளி மாணவ, மாணவியர்
கோவை: குனியமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்ட உயர்மட்ட நடைபாதை பாலத்தை திறந்துவைத்த மாணவ, மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர். மாநகராட்சி தெற்கு மண்டலம், 87வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, ரோட்டை கடப்பதில் மாணவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பாலக்காடு ரோடு, ரைஸ் மில் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த, உயர்மட்ட நடைபாதை பாலமானது, இப்பள்ளி அருகே மாற்றியமைக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலையில், குனியமுத்துார் அரசுப் பள்ளி மாணவ, மாணவியரே ரிப்பன் வெட்டி பாலத்தை நேற்று திறந்துவைத்தனர்.தொடர்ந்து, 92வது வார்டு சுகுணாபுரம், சிட்கோ பிரதான சாலை மற்றும், 97வது வார்டு பிள்ளையார்புரம் ரோடு ஆகிய பகுதிகளில், ரூ.1.26 கோடி மதிப்பீட்டில், 2.85 கி.மீ., துாரத்துக்கு மறுதார் தளம் அமைக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் துவக்கிவைத்தார்.பிள்ளையார்புரம் பிரதான ரோட்டில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தனர். துணை மேயர் வெற்றிசெல்வன், உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.